அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: தமிழக கவர்னர் ஆர்என் ரவி சிதம்பரம் வருகை மாணவர்களுக்கு இன்று பட்டங்கள் வழங்குகிறார்


அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: தமிழக கவர்னர் ஆர்என் ரவி சிதம்பரம் வருகை மாணவர்களுக்கு இன்று பட்டங்கள் வழங்குகிறார்
x
தினத்தந்தி 4 Oct 2023 12:15 AM IST (Updated: 4 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சிதம்பரம் வருகை தந்தார். இன்று (புதன்கிழமை) அவர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

கடலூர்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 85- வது பட்டமளிப்பு விழா இன்று (புதன்கிழமை) மாலை 3 மணி அளவில் பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடக்கிறது. விழாவுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். விழாவில் அண்ணாமலை பல்கலைக்கழக இணைவேந்தரும், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி கலந்து கொண்டு பேசுகிறார்.

மேலும் பட்டமளிப்பு விழா சிறப்பு அழைப்பாளராக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார். இந்த விழாவில் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன், பதிவாளர் (பொறுப்பு) சிங்காரவேல் மற்றும் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள், கல்விக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

கவர்னர் வருகை

பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மாலை 4.30 மணிக்கு கார் மூலம் சென்னை ராஜ்பவனில் இருந்து புறப்பட்டு 6.30 மணி அளவில் புதுச்சேரி வந்தடைந்தார். அங்கு அக்கார்டு ஓட்டலில் தங்கி சிறிது நேரம் ஓய்வு எடுத்த, அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு இரவு 8 மணி அளவில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையை வந்தடைந்தார்.

அங்கு அவருக்கு மாவட்ட வருவாய் அதிகாரி ராஜசேகரன், சிதம்பரம் சப்-கலெக்டா் சுவேதா சுமன், அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன், பதிவாளர் (பொறுப்பு) சிங்காரவேல், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து இரவு விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர், இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணி முதல் 10.15 மணி வரை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பதக்கம் பெறும் மாணவர்களிடையே கலந்துரையாடுகிறார். பிறகு 10.30 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஆதனூர் கிராமத்திற்கு செல்கிறார்.

நந்தனார் குருபூஜை

காலை 11 மணி அளவில் அங்கு நடைபெறும் சுவாமி நந்தனார் குருபூஜையில் பங்கேற்கிறார். மதியம் 12.30 மணி வரை விழாவில் பங்கேற்கும் அவர், அங்கிருந்து புறப்பட்டு அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். அங்கு மதிய உணவுக்கு பிறகு மாலை 3 மணி அளவில் அண்ணாமலை பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடக்கும் பட்டமளிப்பு விழாவுக்கு தலைமை தாங்கி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். மாலை 5.30 மணிக்கு பிறகு சிதம்பரத்தில் இருந்து புறப்பட்டு புதுச்சேரி வழியாக சென்னை செல்கிறார். முன்னதாக கவர்னர் வருகையையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Next Story