அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் அடித்துக் கொலை
நெய்வேலி அருகே சொத்து தகராறில் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியரை அடித்துக்கொலை செய்த தம்பதியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நெய்வேலி,
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள ஆயிப்பேட்டை கிழக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் ஆதிநாராயணமூர்த்தி (வயது 40), சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், இவரது தம்பி ஸ்ரீராமன் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. மேலும் அண்ணன்-தம்பி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
இரும்பு கம்பியால் தாக்குதல்
இந்த நிலையில் நேற்று ஆதிநாராயணமூர்த்திக்கும் ஸ்ரீராமனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது ஆத்திரமடைந்த ஸ்ரீராமன் மற்றும் அவருடைய மனைவி சித்ரா ஆகிய இருவரும் ஒன்று சேர்ந்து இரும்பு கம்பியால் ஆதிநாராயணமூர்த்தியையும், அவரது மனைவி மகேஸ்வரியையும் தாக்கினர்.
இதில் பலத்த காயமடைந்த ஆதிநாராயணமூர்த்தி, மகேஸ்வரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு ஆதிநாராயணமூர்த்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிய மகேஸ்வரிக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு, ஸ்ரீராமன், சித்ரா ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள். சொத்து தகராறில் சொந்த அண்ணனை, தம்பி தனது மனைவியுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்த சம்பவம் நெய்வேலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.