தஞ்சையில் அண்ணா பிறந்த நாள் விழா
அண்ணா பிறந்த நாளையொட்டி தஞ்சையில் உள்ள அவருடைய சிலைக்கு தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசியல் கட்சியினர் ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தஞ்சை மாநகர தி.மு.க. சார்பில் கலைஞர் அறிவாலயத்தில் இருந்து தி.மு.க.வினர் ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் உபயதுல்லா, தி.மு.க. சட்ட திட்ட திருத்தக்குழு உறுப்பினர் இறைவன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், மாநில விவசாய அணி துணை செயலாளர் ஜித்து, மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர செயலாளரும், மேயருமான சண்.ராமநாதன் வரவேற்றார்.
தி.மு.க.வினர் மரியாதை
ஊர்வலம் காந்திஜி சாலை வழியாக பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலையை அடைந்தது. சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஒன்றிய செயலாளர்கள் அருளானந்தசாமி, உலகநாதன், முரசொலி, செல்வகுமார், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் தஞ்சை தொகுதி எம்.எல்.ஏ. டி.கே.ஜி. நீலமேகம் தனது ஆதரவாளர்களுடன் வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
எடப்பாடி பழனிசாமி அணியினர்
அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி அணியினர் தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே இருந்து மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு அண்ணா சிலையை அடைந்தனர். பால்வள தலைவர் காந்தி, முன்னாள் மாநகராட்சி மேயர் சாவித்திரி கோபால், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம், கூட்டுறவு அச்சக தலைவர் புண்ணியமூர்த்தி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் பகுதி செயலாளர் வக்கீல் சரவணன் வரவேற்றார்.
ஊர்வலம் அண்ணா சிலையை அடைந்ததும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நிர்வாகிகள் பஞ்சநாதன், பாலை.ரவி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், முன்னாள் கவுன்சிலர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஓ.பன்னீர்செல்வம் அணியினர்
இதேபோல் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கரந்தை பகுதி செயலாளர் அறிவுடைநம்பி தலைமையில் திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வினுபாலன், பகுதி செயலாளர்கள் சண்முகபிரபு, சாமிநாதன், ஒன்றிய செயலாளர் துரை.வீரணன் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சத்தியராஜ், கவுன்சிலர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் அ.ம.மு.க.வினர் மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நிர்வாகிகள் விருத்தாசலம், வக்கீல் நல்லதுரை, மாரியம்மன்கோவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனசேகர், மாநகராட்சி கவுன்சிலர் கண்ணுக்கினியாள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திராவிடர் கழகத்தினர் மாவட்ட தலைவர் வக்கீல் அமர்சிங் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.