அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை


அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
x

100 நாள் வேலையை முறையாக வழங்கக்கோரி அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

புதுக்கோட்டை

முற்றுகை

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே பெண்களுக்கு 100 நாள் வேலை முழுமையாக வழங்காமல் வருடத்தில் சில நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்க்கும் பெண்களில் சிலரது அட்டைகளில் சீல் வைத்ததால் மற்ற பெண் பணியாளர்களுக்கு வேலை கிடைக்காமல் போய் விடுகிறது.

எனவே முறையாக வேலை வழங்க வேண்டும் என கூறி வடசேரிப்பட்டி, முல்லைநகர், சிவப்பட்டி, தாவூதுமில் கிராம பெண்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முற்றுகையிட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

முறையாக வழங்க நடவடிக்கை

அப்போது அட்டைகளில் சீல் வைக்கப்பட்டதால் வேலை கிடைக்காது என்பது தவறான தகவல். அதேபோல் அனைத்து நபர்களுக்கும் 100 நாள் வேலை முறையாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து பெண்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பெண்கள் கூறுகையில், சட்டபூர்வமாக 100 நாள் வேலை பணியாளர்களுக்கு ரூ.294 ஊதியம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை ஆண்டுக்கு முழுமையாக வழங்க வேண்டும். வசதி படைத்தவர்கள் அட்டையில் மட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு வேலை கிடைக்கிறது. எங்களை போன்ற ஏழை எளியவர்களின் அட்டையில் சீல் வைக்கப்படாததால் எங்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.


Next Story