விவசாயிகள் மண் பரிசோதனை செய்யும் வழிமுறைகள் அறிவிப்பு


விவசாயிகள் மண் பரிசோதனை செய்யும் வழிமுறைகள் அறிவிப்பு
x

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மண் பரிசோதனை செய்யும் வழிமுறைகள் குறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் விளக்கம் அளித்து உள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மண் பரிசோதனை செய்யும் வழிமுறைகள் குறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் விளக்கம் அளித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மண் பரிசோதனை

மண்ணின் களர், அமில நிலை, உவர்நிலை, ஊட்டச்சத்துக்கள் மற்றும் சுண்ணாம்பு சத்து தண்மைகளை அறிந்து தக்க சீர்திருத்தம் செய்திடவும், தேவைக்கேற்ப உரமிட்டு உரச்செலவை குறைத்திடவும், மண்ணின் தன்மைக்கேற்ப பயிரை தேர்ந்தெடுத்து சாகுபடி செய்து அதிக மகசூல் ஈட்டவும் மண் பரிசோதனை செய்வது அவசியம் ஆகும். மண்மாதிரிகளை நிலம் தரிசாக இருக்கும் காலத்தில், உரமிடுவதற்கு முன் அல்லது உரமிட்ட 3 மாதத்துக்குப் பிறகு எடுக்க வேண்டும். பயிர்கள் உள்ள நிலங்களில் மண் மாதிரிகள் எடுக்கக் கூடாது.

மண்மாதிரி எடுக்கும் பகுதி முழுவதையும் குறுக்கும் நெடுக்குமாக நடந்து அந்த பகுதியில் காணப்படும் நிலச்சரிவு, நிறம், மேலாண்மை முறை, பயிர் சுழற்சி இவற்றிற்கு ஏற்றாற்போல பல பகுதிகளாகப் பிரித்து, தனித்தனியாக மண் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். வரப்பு, வாய்க்கால்கள், மரத்தடி நிழல் பகுதிகள் மற்றும் கிணற்றுக்கு அருகிலும் மக்கு குப்பை, உரங்கள், பூஞ்சான மற்றும் பூச்சி மருந்து இடப்பட்ட பகுதிகளில் மண் மாதிரி எடுக்கக்கூடாது.

மாதிரி சேகரிப்பு முறை

மண் மாதிரிகள் எடுக்க வேண்டிய இடத்தில் உள்ள இலை, சருகு, புல், செடி ஆகியவற்றை கையினால் மேல் மண்ணை நீக்காமல், அப்புறப்படுத்த வேண்டும். மாதிரி எடுக்கும் பொழுது ஆங்கில எழுத்து 'ஏ" போல் மண்வெட்டியால் இருபுறமும் வெட்டி அந்த மண்ணை நீக்கி விட வேண்டும். பிறகு நிலத்தின் மேல்மட்ட பகுதியிலிருந்து குறிப்பிட்ட ஆழம் வரை (0 - 15 சென்டி மீட்டர், ஆழம் -நெல், கம்பு, ராகி, பயறுவகைகள் மற்றும் நிலக்கடலை பயிர்களுக்கு அல்லது

0 - 23 சென்டி மீட்டர், ஆழம் - பருத்தி, சூரியகாந்தி, வாழை, மிளகாய், மற்றும் காய்கறி பயிர்களுக்கு அல்லது மலைப் பயிர்கள், பழந்தோட்டப்பயிர்களுக்கு 30 சென்டி மீட்டர், 60 சென்டி மீட்டர் மற்றும் 90 சென்டி மீட்டர் ஆழங்களில் மூன்று மண் மாதிரிகள்) மாதிரி சேகரிக்க வேண்டும். இவ்வாறாக குறைந்த பட்சம் ஒரு ஏக்கரில் 5 முதல் 10 இடங்களில் மாதிரிகள் சேகரித்து அவற்றை ஒன்றாக்கிட வேண்டும். மண் மாதிரிகள் ஈரமாக இருந்தால் முதலில் அதனை நிழலில் உலர்த்த வேண்டும். நுண் ஊட்டங்கள் அறிய வேண்டுமானால் பிளாஸ்டிக் பக்கெட்டில் மாதிரிகள் சேகரிக்க வேண்டும், மண்வெட்டி, இரும்பு சட்டிகளை பயன்படுத்தக் கூடாது.

அதிக மகசூல்

பின்பு சேகரித்த மாதிரிகளை ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு நன்றாக கலக்கிட வேண்டும். வாளியில் சேகரித்த மண் மாதிரியை சுத்தமான சாக்கு அல்லது பாலித்தீன் தாள் மீது பரப்பி, கால் குறைப்பு முறையில் ஆய்வுக்கு தேவைப்படும் அரை கிலோ அளவு மண் மாதிரி சேகரிக்க வேண்டும். சேகரித்த மண் மாதிரியை சுத்தமான ஒரு துணிப்பையில் போட்டு அதன் மீது விவசாயின் பெயர், முகவரி, சர்வே எண், சாகுபடி செய்யப்பட்ட பயிர் ஆகிய விவரங்களைக் குறிப்பிட்டு மண் பரிசோதனை நிலையம், கோவில்பட்டி வட்டாரத்துக்கு அனுப்பலாம். உரம் மற்றும் பூச்சி மருந்துகள் வைக்கப்பட்டிருந்த சாக்குகளை அல்லது பைகளை மண் மாதிரிகள் அனுப்ப உபயோகிக்க கூடாது. ஒரு மண் மாதிரியைப் பரிசோதிக்க ஆய்வுக்கட்டணம் ரூ.20 ஆகும். தற்போது ஒவ்வொரு விவசாயியும் தங்களது சர்வே எண்ணில் மண் வளம் அறியவும், பயிர் சாகுபடி செய்ய ஏற்ற பயிர்களை அறியவும் ' தமிழ் மண்வளம் "; என்ற வலைதளம் விவசாயிகள் உபயோகத்துக்கு கொண்டு வர அரசால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், மேற்கூறிய வழிமுறைகளளைப் பின்பற்றி விவசாயிகள் மண்பரிசோதனை செய்து மண்வள அட்டை பரிந்துரைக்கு ஏற்ப பயிர் சாகுபடி செய்து உரமிட்டு, அதிக மகசூல் பெற்று வருமானம் பெருக்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story