நாகர்கோவில் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் மீண்டும் தீ விபத்து


நாகர்கோவில் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் மீண்டும் தீ விபத்து
x

நாகர்கோவில் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

மலைபோல் குப்பைகள்

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் பீச்ரோடு பகுதியில் உள்ள வலம்புரிவிளை குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு பல டன் குப்பைகள் கொட்டப்படுவதால் பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. அவற்றில் உள்ள பிளாஸ்டிக்குகள் பிரிக்கும் பணி நடந்து வருகிறது.

தற்போது சேகரிக்கப்படும் குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உரமாக மாற்றப்பட்டு வருகிறது. ஏற்கனவே உள்ள குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே அங்கு உள்ள குப்பைகளை மாற்ற வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ விபத்து சம்பவங்களும் நடந்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.

மீண்டும் தீ விபத்து

இந்தநிலையில் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் குப்பை கிடங்கின் நுழைவாயிலின் இடதுபுறம் உள்ள குப்பை மேட்டில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அங்கு புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதை பார்த்த மாநகராட்சி ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு நிலைய அதிகாரி முகமது சலீம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காலை 6 மணி முதல் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஒரு தீயணைப்பு வாகனமும், மின் மோட்டார் பம்ப் ஒன்றும் இந்த தீயணைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்ததின் காரணமாக மாலையில் தீ கட்டுக்குள் வந்தது.

சாரல் மழை விட்டு, விட்டு பெய்து கொண்டிருந்த நிலையிலும் குப்பை கிடங்கில் தீப்பற்றி எரிந்ததால் பெரும் புகை கிளம்பியது. இதனால் அப்பகுதியை சுற்றிலும் வசிக்கும் மக்களும், அவ்வழியாக சென்று வரும் மக்களும் மிகுந்த அவதிக்குள்ளானார்கள். மேலும் அந்த வழியாக வாகனங்களிலும், பாதசாரியாகவும் சென்றவர்கள் துர்நாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் மூக்கை பொத்தியபடி கடந்து சென்றதை காண முடிந்தது.

---


Next Story