டிராக்டர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலி
சமயநல்லூர் அருகே டிராக்டர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் நேற்று சிகிச்சையில் இருந்த ஒருவர் உயிரிழந்ததால் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
வாடிப்பட்டி,
சமயநல்லூர் அருகே டிராக்டர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் நேற்று சிகிச்சையில் இருந்த ஒருவர் உயிரிழந்ததால் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
டிராக்டர் மீது பஸ் மோதியது
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே பரவை மில் காலனி எதிராக சாலை தடுப்பில் மண் அள்ளிக்கொண்டிருந்த டிராக்டர் மற்றும் தொழிலாளர்கள் மீது கடந்த 7-ந்தேதி இரவு 8 மணிக்கு பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து சோழவந்தான் சென்ற அரசு பஸ் மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே ஆரப்பாளையத்தைச் சேர்ந்த கண்ணன் (வயது 38) என்பவர் இறந்தார். அதன் பின் நள்ளிரவில் எழுமலையை சேர்ந்த ரவிக்குமார் (46) என்பவர் இறந்தார். 8-ந்தேதி மதியம் 12 மணிக்கு ஆரப்பாளையம் மஞ்சள் மேடு காலனியைச் சேர்ந்த சரவணகுமார் (40) என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் ஒருவர் சாவு
மேலும் காயமடைந்த பரவை ரஞ்சித், வலையங்குளம் ஆறுமுகம், நிலக்கோட்டை பொன்ராமன், கல்லணை மகாலிங்கம், விளாங்குடி வெள்ளையன், கரிமேடு காதர் பாட்சா ஆகியோர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் நேற்று வலையங்குளம் ஆறுமுகம் (48) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதை தொடர்ந்து இந்த விபத்தில் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.