ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஒருவர் பலி...!
ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்.
சென்னை,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியை சேர்ந்தவர், தனசேகரன். உரக்கடை நடத்தி வருகிறார். இவருடைய இளைய மகன் வினோத்குமார் (வயது21). மதுரை திருமங்கலம் அருகே உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
டென்னிஸ் விளையாட்டில் ஈடுபாடு கொண்டவர் வினோத்குமார். கல்லூரி விடுதி அறையில் தங்கி இருந்து படித்து வந்தார். நேற்று காலை அவர் கல்லூரிக்கு செல்லவில்லை. நண்பர்களிடம் உடல்நிலை சரியில்லை, அதனால் கல்லூரிக்கு வரவில்லை என கூறியதாக சொல்லப்படுகிறது.
இந்தநிலையில் அவருடன் தங்கி இருந்த மாணவர் ஒருவர், மதியம் விடுதி அறைக்கு வந்த போது வினோத்குமாரின் அறை உள்புறம் பூட்டப்பட்டு இருந்தது. எனவே கதவை தட்டி உள்ளார். வினோத்குமார் திறக்காததால் சந்தேகம் அடைந்த சக மாணவர், கல்லூரி ஆசிரியரிடம் தகவல் தெரிவித்தார். விடுதி வார்டன், ஆசிரியர்கள் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மாணவர் வினோத்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
உடனே கள்ளிக்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மாணவரின் உடலை மீட்டு பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வினோத்குமார் ஆன்லைனில் சூதாடியதன் மூலம் பணத்தை இழந்ததால் மனவருத்தம் அடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் கல்லூரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.