புதிய தார் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் போராட்டம்
ஆம்பூர் அருகே புதிய தார் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் போராட்டம் நடைபெற்றது.
ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலம் காளிகாபுரம் பகுதியில் புதிய தார் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் தார் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் இரவு போராட்டத்தில் ஈடுபட்டு அந்த வழியாக சென்ற லாரிகளை சிறைபிடித்தனர். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்தநிலையில் நேற்று அதே பகுதியில் புதிய தார் தொழிற்சாலை அமைப்பதற்கு எந்திரங்கள், ஜல்லி ஏற்றிய லாரிகள் சென்றதாக கூறப்படுகிறது. இதை அறிந்த கிராம மக்கள் மீண்டும் லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தாசில்தார் பத்மநாதன் மற்றும் தாலுகா போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் லாரிகளை அதிகாரிகள் திருப்பி அனுப்பியதால் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.