பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-நெல்லைக்கு மற்றொரு சிறப்பு ரெயில்- தெற்கு ரெயில்வே
தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு கூடுதல் சிறப்பு ரெயில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
சென்னை,
பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட முக்கிய நகர பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணிக்க தயாராகி வருகின்றனர். பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து நாகர்கோவில், திருவனந்தபுரம் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு கூடுதல் பொங்கல் சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தாம்பரம் - நெல்லை அதிவிரைவு சிறப்பு ரயில் (06049) ஜனவரி 14ஆம் தேதியன்று தாம்பரத்திலிருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.00 மணிக்கு நெல்லை வந்து சேரும்.
அதேபோல், மறு மார்க்கத்தில் நெல்லை- தாம்பரம் அதி விரைவு சிறப்பு ரயில் (06050) நெல்லையில் இருந்து ஜனவரி 18 ஆம் தேதியன்று மாலை 05.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு நாளை தொடங்கவுள்ளது.