மேலும் ஒரு வாலிபர் கைது


மேலும் ஒரு வாலிபர் கைது
x
தினத்தந்தி 4 July 2023 12:15 AM IST (Updated: 4 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கொலை வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார். 2 பேர் பண்ருட்டி கோர்ட்டில் சரணடைந்தனர்.

கடலூர்

கடலூர் தாழங்குடாவை சேர்ந்தவர் மதியழகன் (வயது 48), மீனவர். இவரது மனைவி சாந்தி (44). இவர் ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட மதிவாணன் என்பவர் கொலைக்கு பழிக்குப்பழியாக, கடந்த 27-ந் தேதி மதியழகன் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக சாந்தி அளித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தாழங்குடாவை சேர்ந்த 18 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய மாசிலாமணி, பிரகலாதன் ஆகியோர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் மதியழகன் கொலை வழக்கில் தொடர்புடைய தாழங்குடாவை சேர்ந்த முத்து (28) என்பவர் நேற்று காலை மஞ்சக்குப்பம் சேட்டுமாநகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையிலான போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். இதற்கிடையே இவ்வழக்கில் தேடப்பட்ட தாழங்குடாவை சேர்ந்த ராஜேந்திரன்(65), ராமலிங்கம்(58) ஆகியோர் நேற்று பண்ருட்டி கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்நிலையில் மாசிலாமணி, பிரகலாதன் ஆகியோரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க புதுநகர் போலீசார் கடலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2-ல் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) வனஜா, ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து மாசிலாமணி, பிரகலாதன் ஆகியோரை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.


Next Story