அந்தியூர் திமுக எம்.எல்.ஏ சென்ற கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து - 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..!
அந்தியூர் திமுக எம்.எல்.ஏ, ஏ.ஜி. வெங்கடாசலம் சென்ற கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் திமுக எம்.எல்.ஏ ஏ.ஜி. வெங்கடாச்சலம் இன்று சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டி விழாவில் கலந்து கொள்வதற்காக ஈரோட்டில் இருந்து சென்னைக்கு ரெயில் மூலம் செல்வதற்காக நேற்று இரவு 11:30 மணியளவில் அந்தியூரில் இருந்து ஈரோட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
காரை டிரைவர் கார்த்திகேயன் (வயது35) என்பவர் ஓட்டிச் சென்றார். ஏ.ஜி வெங்கடாசலம் எம்.எல்.ஏ. முன் இருக்கையில் அமர்ந்திருந்தார்.
அப்பொழுது இரவு 11.30 மணி அளவில் மழையும் தூரி கொண்டிருந்தது. கார் அந்தியூர் அடுத்து வாய்க்கால் பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டின் தலைகுப்புற கவிழ்ந்து உருண்டது.
இந்த விபத்தில் காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஏ.ஜி. வெங்கடாசலம் எம்.எல்.ஏ. மற்றும் டிரைவர் கார்த்திகேயன் பின் இறுக்கையில் அமர்ந்திருந்த முருகன் ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
கார் டிரைவர் கார்த்திகேயன் மற்றும் முருகன் இருவரும் லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டு இருந்தது. ஏ.ஜி வெங்கடாசலம் எம்எல்ஏவுக்கு ஒரு சில இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.