நாகர்கோவிலில் லஞ்ச ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி மாணவிகள் பங்கேற்பு
நாகர்கோவிலில் லஞ்ச ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நாகர்கோவில்:
தமிழகத்தில் கடந்த 31-ந் தேதி முதல் நாளை வரை லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி வடசேரி பஸ் நிலையத்தில் நேற்று நடந்தது.
இதற்கு லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு பீட்டர் பால்துரை தலைமை தாங்கினார். கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலமாக லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் நிகழ்ச்சியில் லஞ்சம் கொடுப்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்தும் விளக்கினார்கள். அப்போது லஞ்ச ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் கையில் பிடித்திருந்தனர்.
அதை தொடர்ந்து லஞ்சம் பற்றி தகவல் தெரிவிக்க வேண்டிய முகவரி அடங்கிய துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. அந்த துண்டு பிரசுரத்தில் நாகர்கோவில் புன்னைநகரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலைய முகவரி மற்றும் செல்போன் 9442364144, தொலைபேசி எண் 04652-227339 ஆகியவை இடம்பெற்று இருந்தது. இதே போல அண்ணா பஸ் நிலையம் மற்றும் மார்த்தாண்டம் பஸ் நிலையத்திலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.