கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை; அதிகாரியிடம் கணக்கில் வராத ரூ.41 ஆயிரம் சிக்கியது
கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அதிகாரியிடம் இருந்த ரூ.41 ஆயிரம் கணக்கில் வராத பணம் சிக்கியது.
கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அதிகாரியிடம் இருந்த ரூ.41 ஆயிரம் கணக்கில் வராத பணம் சிக்கியது.
குமரியில் 2-வது நாளாக சோதனை
நாகர்கோவில் வடசேரி மேற்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத பணம் ரூ.17,853 பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தநிலையில் குமரியில் 2-வது நாளாக நேற்று மேலும் ஒரு அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு:-
சார்பதிவாளர் அலுவலகத்தில்...
கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அனுமதி இல்லாத வீட்டு மனைகளை பதிவு செய்ய லஞ்சம் வாங்கிக் கொண்டு பத்திரப்பதிவு செய்யப்படுவதாக நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதனையடுத்து நேற்று மாலையில் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு எக்டர் தர்மராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமா, சிவசங்கரி உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தை கண்காணித்தபடி இருந்தனர்.
ரூ.41 ஆயிரம் சிக்கியது
அந்த சமயத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 15 நாட்களாக பொறுப்பு சார்பதிவாளராக பணியாற்றி வந்த இளநிலை உதவியாளர் அன்வர் அலி பணியை முடித்து விட்டு ஆட்டோவில் வீடு நோக்கி புறப்பட்டார்.
கொட்டாரத்தை அடுத்துள்ள மந்தாரம்புதூரை சென்றடைந்த போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை மடக்கி பிடித்து சார்பதிவாளர் அலுவலகம் கொண்டு வந்தனர். பின்னர் அவரிடமும், அலுவலகத்திலும் தீவிர சோதனை நடந்தது.
இந்த சோதனை மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 10.30 மணி வரை நடத்தப்பட்டது. இதில் இளநிலை உதவியாளர் அன்வர் அலியுடன் இருந்து கணக்கில் வராத ரூ.41 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பணம் பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் கேட்ட போது அவர் முறையான பதிலளிக்கவில்லை. பின்னர் கணக்கில் வராத அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக அன்வர்அலியிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.