39 தடுப்பணைகள் கட்டாமல் ரூ.30 லட்சம் முறைகேடு அரசு அலுவலர்கள் உள்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு
39 தடுப்பணைகள் கட்டாமல் ரூ.30 லட்சம் முறைகேடு அரசு அலுவலர்கள் உள்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
45 தடுப்பணைகள்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம், மலையாளப்பட்டி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட மஞ்சினபாறை, காந்தி நகர் கூட்டு மருதை, கொட்டாரக்குன்று முருகன் கோவில் ஓடைகளின் குறுக்கே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் (100 நாள் வேலை) மூலம் தலா 15 தடுப்பணைகள் என மொத்தம் 45 தடுப்பணைகள் கட்ட 2019-20-ம் நிதியாண்டில் அப்போதைய மாவட்ட நிர்வாகம் மூலம் அனுமதி அளிக்கப்பட்டது. ஒரு தடுப்பணை கட்ட ரூ.77 ஆயிரம் வீதம் 45 தடுப்பணைகள் கட்ட மொத்தம் ரூ.34 லட்சத்து 65 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மேற்கண்ட பகுதிகளில் 45 தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டதாக கூறி, அதன் முழு தொகையையும் 4 தனியார் ஒப்பந்ததாரர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
முறைகேடு
இந்த நிலையில் பாறாங்கல் தடுப்பணைகள் கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில், 45 தடுப்பணைகளில், 6 தடுப்பணைகள் மட்டுமே கட்டி விட்டு, 39 தடுப்பணைகள் கட்டப்படாமலேயே கட்டி முடிக்கப்பட்டதாக கூறி அரசு நிதியான ரூ.30 லட்சத்து 3 ஆயிரம் முறைகேடு செய்யப்பட்டிருந்தது லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரால் தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கு அப்போது வேப்பந்தட்டை ஊராட்சிAnti-corruption police case against 7 people including government officials for embezzlement of Rs.30 lakhs without building 39 barrages ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிந்த 3 அரசு அலுவலர்களும் மற்றும் 4 தனியார் ஒப்பந்ததாரர்களும் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
அரசு அலுவலர்கள்-தனியார் ஒப்பந்ததாரர்கள்
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஹேமசித்ரா உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி புகாரின்பேரில், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுாிந்த வட்டார ஓவர்சியர் மணிவண்ணன் (வயது 52), இளநிலை பொறியாளர் நாகராஜன் (56), வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன் (55) ஆகிய 3 பேர் மீது அரசு பதவியை தவறாக பயன்படுத்தி கூட்டு சதி செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த தடுப்பணைகளின் தனியார் ஒப்பந்ததாரர்களான மலையாளப்பட்டியை சேர்ந்த வி.ஆர்.துரைசாமி (63), தழுதாழை பகுதியை சேர்ந்த மணியின் மனைவி ராணி (56), சதீஷ்குமார் (39), வெற்றிவேல் (45) ஆகிய 4 பேர் மீது நேர்மையற்ற நோக்கத்துடன் போலியான ஆவணங்கள், பொய்யான பதிவுகளை உருவாக்கி முறைகேடுகளில் ஈடுபட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இந்த முறைகேடு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது மணிவண்ணன் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார ஓவர்சியராகவும், அறிவழகன் பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி), நாகராஜன் சேலம் மாவட்டத்திலும் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. 39 தடுப்பணைகள் கட்டாமலேயே கட்டி முடிக்கப்பட்டதாக அரசு அலுவலர்கள், தனியார் ஒப்பந்ததாரர்கள் முறைகேட்டில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.