விருத்தாசலத்தில் பரபரப்பு பெண் ஊழியர்களுக்கு வந்த ஊதியத்தை மொத்தமாக சுருட்டிய அதிகாரிகள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்
விருத்தாசலத்தில் பெண் ஊழியர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு வந்த ஊதியத்தை விருத்தாசலம் மகளிர் திட்ட அலுவலகத்தில் மொத்தமாக அதிகாரிகள் சுருட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அங்கிருந்து கட்டுகட்டாக பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.
விருத்தாசலம்,
மகளிர் திட்ட அலுவலகம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் வட்டார சேவை மைய கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் மகளிர் திட்ட வட்டார அலுவலகம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட அலுவலகம், இ-பொது சேவை மையம் ஆகிய 3 அலுவலகங்கள் இயங்கி வருகிறது.
இதில், மகளிர் திட்ட அலுவலகத்தில் மகளிர் குழு அமைத்தல், மகளிர் குழு உறுப்பினர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளித்தல், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துதல், அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று தருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.
பணம் வசூலிப்பதாக புகார்
இந்நிலையில் தேசிய ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் மகளிர் திட்ட அலுவலகத்தில், பணம் வசூல் அதிகமாக நடந்து வருவதாக கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் சென்றது.
அதன்பேரில் நேற்று மாலை கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன், இன்ஸ்பெக்டர் திருவேங்கடம், மாவட்ட ஆய்வு குழு வருவாய் ஆய்வாளர் முருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீரென அலுவலகத்திற்குள் நுழைந்து, அலுவலகத்தில் இருந்த யாரையும் வெளியே விடாமல் உள்ளே வைத்து விசாரணை நடத்தினர்.
பணம் பறிமுதல்
அப்போது மகளிர் திட்ட அலுவலகத்தில் மகளிர் திட்டத்தில் பணிபுரியும் 30-க்கும் மேற்பட்ட கிராம கணக்காளர்கள் மற்றும் அந்த அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களும் உள்ளே இருந்தனர். இதனால் அலுவலர்கள், கணக்காளர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.
அப்போது, அலுவலகத்தில் 500 ரூபாய் கட்டுக்களாக இருந்த ரூ.3 லட்சத்தை போலீசார் கைப்பற்றி, அந்த பணம் எவ்வாறு வந்தது குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
ஆனால் அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அங்கிருந்த கணக்காளர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் எடுத்து வந்த பணம் என்பது தெரியவந்தது.
51 ஊராட்சிகள்
மேற்கொண்டு விசாரித்தபோது வெளியான தகவல் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விருத்தாசலம் ஒன்றியத்தில் 51 ஊராட்சிகள் உள்ளன. இதில் மகளிர் திட்டத்தின் கீழ் ஊராட்சிக்கு ஒரு கணக்காளர் இருக்கிறார். இவர்களுக்கு கீழ் கால்நடைத்துறை மற்றும் வேளாண்துறைக்கு தலா ஒருவர் என்று 2 பெண்கள் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் கால்நடை மற்றும் வேளாண் துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் அரசின் நலத்திட்டங்கள் தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தி, பயனாளிகளிடம் திட்டத்தை சென்றடைய செய்வது, பயனாளிகளுக்கு வங்கி கணக்கு தொடங்கி கொடுப்பது போன்ற பல்வேறு பணிகளை செய்து வந்தனர். இதற்காக அவர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட்டது.
இந்த ஊதியமானது, கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது மொத்தமாக அந்த பணம் சம்பந்தப்பட்ட பணியாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
ஊராட்சிக்கு 96 ஆயிரம் ரூபாய்
இந்த நிலையில், அதிகாரிகள் கணக்காளர்களிடம் உங்கள் பகுதியில் 2 பெண்களின் வங்கி கணக்கிற்கு வந்த பணத்தை வசூலித்து கொண்டு வந்து தருமாறு வற்புறுத்தி இருக்கிறார்கள். அதன்பேரில் ஊராட்சிக்கு ரூ.96 ஆயிரம் வீதம் 51 ஊராட்சிகளை சேர்ந்த கணக்காளர்களும் பணத்தை எடுத்து வந்து சில நாட்களாக, விருத்தாசலத்தில் உள்ள அலுவலகத்தில் ஒப்படைத்து இருக்கிறார்கள். நேற்றும் சில கணக்காளர்கள் வந்து பணத்தை ஒப்படைத்த நிலையில், அந்த பணம் போலீசின் வசம் சிக்கி இருப்பது தெரியவந்தது.
இரவிலும் நடந்த விசாரணை
மகளிர் திட்ட பணியாளர்களுக்கு வந்த ஊதிய தொகையை அதிகாரிகள் திரும்ப பெறுவதற்கான காரணம் என்ன?, ஏன் இதுபோன்று அவர்கள் செயல்பட்டார்கள் என்பது குறித்து தெரியவில்லை. இரவு 10 மணியை கடந்தும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை நடந்தது. இந்த சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.