லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை


லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
x

சிவகாசி மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக தி.மு.க. பெண் கவுன்சிலர் கூறிய குற்றச்சாட்டை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்திய நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக தி.மு.க. பெண் கவுன்சிலர் கூறிய குற்றச்சாட்டை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்திய நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லஞ்ச புகார்

சிவகாசி மாநகராட்சியின் 5-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் இந்திராதேவி. இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29-ந்தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தின் போது தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தீர்வை ரசீது போட மாநகராட்சி அதிகாரிகளை அணுகிய போது அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக கூறினார்.

பின்னர் தான் கொண்டு வந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை அதிகாரி ஒருவரிடம் கொடுக்க முயன்றார். இந்த நிலையில் பெண் கவுன்சிலர் இந்திராதேவி கூறிய குற்றச்சாட்டுக்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரகசியமாக விசாரணை நடத்தினார்கள்.

விசாரணை அறிக்கை

இதில் கவுன்சிலர் இந்திராதேவி குற்றம்சாட்டிய அதிகாரிகள் குறித்தும், குற்றச்சாட்டு உண்மையா என்பது குறித்தும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பலரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி அறிக்கை தயார் செய்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் சிவகாசி மாநகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பதவி நீக்கம்

இந்தநிலையில் சிவகாசி மாநகராட்சி கவுன்சிலராக உள்ள ஒருவர், கவுன்சிலர் இந்திராதேவி தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த குற்றச்சாட்டை கூறியதாகவும், பதவி ஏற்பு நிகழ்ச்சியின் போது கவுன்சிலர் இந்திராதேவி எடுத்துக்கொண்ட சத்திய பிரமாணத்தை மீறி செயல்பட்டதாகவும், மாமன்றத்துக்கும், இந்திய அரசியல் அமைப்பின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் களங்கம் ஏற்படுத்தியதாக கூறி அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையர் உள்ளிட்ட 13 பேருக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story