கட்டிட அனுமதி வழங்க லஞ்சம் வாங்கிய 2 பேர் கைது எதிரொலி:கடலூர் மாநகராட்சி ஆணையாளரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
கட்டிட அனுமதி வழங்க லஞ்சம் வாங்கிய 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கடலூர் மாநகராட்சி ஆணையாளரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினா்.
கடலூர் செம்மண்டலம் குண்டுசாலை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் கோவிந்தசாமி மகன் பரணி (வயது 33). காப்பீட்டு நிறுவன ஊழியர். இவர் அதே பகுதியில் உள்ள தனது தந்தைக்கு சொந்தமான காலி மனையில் வீடு கட்ட, மாநகராட்சியில் கட்டிட அனுமதி கேட்டிருந்தார். அப்போது பங்கஜம் பிளானர்ஸ் நிறுவன உரிமையாளர் ஆறுமுகம் மூலம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக மாநகராட்சி இளநிலை உதவியாளர் ரகோத்தமன், ஆறுமுகம் ஆகியோர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தியை நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். பின்னர் அவர் லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்திற்கு நேற்று மதியம் சென்றார். அங்கு மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தியிடம், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கட்டிட அனுமதிக்கு மாநகராட்சி இளநிலை உதவியாளர் லஞ்சம் பெற்றது தொடர்பாக விசாரணை நடத்தினர்.