சேலத்தில் உள்ள நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை கணக்கில் வராத ரூ.25 ஆயிரம் பறிமுதல்


சேலத்தில் உள்ள  நகர் ஊரமைப்பு அலுவலகத்தில்   லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  கணக்கில் வராத ரூ.25 ஆயிரம் பறிமுதல்
x

சேலத்தில் உள்ள நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், கணக்கில் வராத ரூ.25 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம்

சேலம்,

லஞ்ச ஒழிப்பு சோதனை

சேலம் சூரமங்கலம் சுப்ரமணியநகர் பகுதியில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்டத்தில் உள்ள வீட்டுமனைபிரிவு மற்றும் அடுக்குமாடு குடியிருப்புகள் கட்டுவதற்கு (அப்ரூவல்) அனுமதி வழங்கப்படுகிறது. இந்த அலுவலகத்தில் மனைப்பிரிவு அனுமதி வேண்டி விண்ணப்பம் செய்யும் நபர்களிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில், சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், நரேந்திரன், ரவிக்குமார் மற்றும் போலீசார் நேற்று மாலை 4 மணிக்கு மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் மற்றும் வெளியாட்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

ரூ.25,300 பறிமுதல்

தொடர்ந்து அலுவலகத்தில் பணியில் இருந்த உதவி இயக்குனர் ராணி மற்றும் அலுவலக ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அலுவலக கார் டிரைவர் கிருஷ்ணன் (வயது 39) என்பவரிடம் ரூ.5 ஆயிரத்து 300 இருப்பது தெரியவந்ததால் அவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், நிலத்திற்கு அப்ரூவல் வாங்க வெளியூரில் இருந்து வந்திருந்த வெங்கடேஷ் என்பவரிடம் ரூ.16 ஆயிரமும், ஆத்தூரை சேர்ந்த மவுலீஸ்வரனிடம் ரூ.4 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இவர்கள் இருவரும் நிலத்திற்கு அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்திருந்ததும், அதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க பணத்தை எடுத்து வந்திருந்ததாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்புக்கொண்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.25 ஆயிரத்து 300 பறிமுதல் செய்யப்பட்டதாகவும், மேலும் லஞ்சம் வாங்கியது தொடர்பாக ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து சரிபார்த்து வருவதாகவும் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

சேலத்தில் நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story