போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
நாகை மாவட்டத்தில் 25 இடங்களில் போதைப்பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவு சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
விழிப்புணர்வு பிரசாரம்
நாகை, வேளாங்கண்ணி, செருதூர், விழுந்தமாவடி, வெள்ளப்பள்ளம், வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் போதைப்பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பரத் சீனிவாசன் தலைமையில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. போதைப் பொருள் கடத்தல் குற்றங்கள் குறித்தும், போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பொதுமக்களுக்கு வழங்கினர். மேலும் பஸ் நிலையம், மீன் இறங்குதலங்கள், ரெயில் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டனர்.
25 இடங்களில்...
இதுகுறித்து போதைப்பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பரத் சீனிவாசன் கூறியதாவது:-
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்துதல், பதுக்கி வைத்து விற்பனை செய்தல் ஆகிய குற்ற சம்பவங்களை தீவிரமாக கண்காணித்து தடுத்து வருகிறோம். இது குறித்து நாகை மாவட்டத்தில் 25 இடங்களில் விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக கடலோரப் பகுதியில் இருந்து தான் இலங்கைக்கு அதிக அளவு கஞ்சா கடத்தப்படுவது தெரியவருகிறது. எனவே சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் கடலோரப் பகுதிகளில் சுற்றித்திரிந்தாலோ, கஞ்சா கடத்தல் குறித்த தகவல் தெரிந்தாலோ முதலில் போதைப்பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும்.
16 வயதில் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகும் ஒரு இளைஞரின் உடல்நிலை, 35 வயதுக்கு மேல் செயல் இழந்து விடும். உடலில் உயிர் இருந்தும், இல்லாதது போல ஆகிவிடும். கஞ்சா கடத்தல் குற்றங்களை தடுக்க தமிழக அரசு சட்டங்களை திருத்தி கடுமையாக்குவதற்கு முடிவெடுத்துள்ளது.
ஒன்றுசேர்ந்து தடுக்கவேண்டும்
போதைப் பொருட்களின் நடமாட்டத்தை பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துதான் தடுத்தாக வேண்டும். இது மக்கள் இயக்கமாகச் செயல்பட வேண்டும். போதை மருந்தை பயன்படுத்துபவர் இதில் இருந்து விடுபட வேண்டும், விடுபட்டவர் போதை பயன்பாட்டுக்கு எதிராக பரப்புரைச் செய்தாக வேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை போதைப்பொருளை பயன்படுத்தாமல் இருக்க கண்காணிக்க வேண்டும் என்றார்.