முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி-ஊர்வலம்


முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி-ஊர்வலம்
x

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டு, ஊர்வலம் நடந்தது.

திருச்சி

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி அரசுத்துறை அலுவலர்கள், மாணவ-மாணவியர்களால் ஏற்கப்பட்டது. அப்போது, இந்திய குடிமகன் மற்றும் குடிமகளாகிய நான், முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் எனவும், மனோரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகப்படுத்த மாட்டேன் எனவும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன் என்றும் உறுதிமொழி ஏற்றனர். இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியில் நிறைவுபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்வுகளில் மாவட்ட சமூகநல அலுவலர் நித்யா, முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் அன்பழகன் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் துணை மேயர் திவ்யா மற்றும் மண்டல தலைவர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story