தூத்துக்குடிமாவட்டத்தில் 3 இடங்களில் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு அதிகாரிகள் திடீர் ஆய்வு


தூத்துக்குடிமாவட்டத்தில் 3 இடங்களில் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு அதிகாரிகள் திடீர் ஆய்வு
x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் உள்ளிட்ட 3 இடங்களில் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

தூத்துக்குடி


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் உள்ளிட்ட 3 இடங்களில் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

பாதுகாப்பு

இந்தியாவில் உள்நாட்டு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பயங்கரவாதிகள் ஊடுருவாமல் தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. கடலோர பாதுகாப்பு படை, கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் அல்-கொய்தா தீவிரவாத இயக்கம் மிரட்டல் விடுத்த சம்பவமும் நடந்தது.

இதனால் நாட்டில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

முக்கிய இடங்கள்

அதன்படி தமிழகத்தில் அதிக மக்கள் வரக்கூடிய, புராதன சின்னங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட 149 முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம், பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டை உள்ளிட்ட இடங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக அறியப்பட்டு உள்ளது.

இந்த இடங்களில் ஏதேனும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்தால், அதனை முறியடிப்பதற்கான வழிமுறைகள் என்ன, பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்பு உள்ள பகுதிகள், பாதுகாப்பு அளிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து கண்டறிவதற்கான நடவடிக்கையில் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு அதிகாரிகள் இறங்கி உள்ளனர்.

அதிகாரிகள் ஆய்வு

இதைத்தொடர்ந்து சென்னை பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்தனர். அவர்களில் ஒரு பிரிவினர் தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்திலும், மற்றொரு பிரிவினர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

அதிகாரிகள், ஆலயத்தின் அமைவிடம், வரைபடம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை பார்வையிட்டனர். ஆலயத்தை சுற்றி உள்ள ஒவ்வொரு கட்டிடங்கள் விவரங்களையும் குறித்துக் கொண்டனர். ஆலயத்தில் இருந்து வெளியில் வருவதற்கான வழிகள் உள்ளிட்டவைகளையும் பார்வையிட்டனர். ஒவ்வொரு பகுதியையும் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு எடுத்துக் கொண்டனர். இதே போன்று திருச்செந்தூரிலும், பாஞ்சாலங்குறிச்சியிலும் ஆய்வு மேற்கொண்டனர்.


Next Story