ஆண்டிப்பட்டி ஏரி நிரம்பியது; 100 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது-பொதுமக்கள் சாலை மறியல்
சேலம் பனங்காடு அருகே ஆண்டிப்பட்டி ஏரி நிரம்பியது. இதையடுத்து ஏரியின் உபரிநீர் அப்பகுதியில் உள்ள 100 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் மழை பெய்ததால் பல்வேறு ஏரி மற்றும் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.
சேலம் பனங்காடு அருகே ஆண்டிப்பட்டி சத்யா நகரில் உள்ள ஏரி நிரம்பியது. இதனால் ஏரியின் உபரிநீர் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்தது. குறிப்பாக இந்த பகுதியில் உள்ள 100 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
வீட்டில் வைத்திருந்த துணிகள், உணவு பொருட்கள், உடைமைகள் மற்றும் மாணவர்களின் நோட்டு, புத்தகங்கள் அனைத்தும் தண்ணீரில் நனைந்து சேதம் அடைந்தன. சுமார் 2 அடி உயரத்திற்கு மேல் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து நிற்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டிப்பட்டி ஏரி பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சாலை மறியல்
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் பனங்காடு பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறும் போது மழை காலங்களில் அடிக்கடி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. எனவே மழை நீர் வடிகால் அமைத்து தர வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறினர்.
இது குறித்த தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடை பட்டது.
தற்காலிக முகாம்
தொடர்ந்து உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி பனங்காடு பகுதிக்கு சென்று அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றி அருகில் உள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைத்தார். தொடர்ந்து ஊருக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்ற அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அப்போது அவர் கூறுகையில், மழை நீர் வடியும் வரை தற்காலிக முகாம் செயல்படும். முகாமில் உள்ளவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது என்றார்.
மழையளவு
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் வாழப்பாடி, ஆத்தூர், தம்மம்பட்டி, ஆனைமடுவு, எடப்பாடி, ஏற்காடு, மேட்டூர் ஆகிய பகுதியில் நேற்று முன்தினம் காலை பரவலாக மழை பெய்தது. இருப்பினும் சேலம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களுக்கு பின்பு நேற்று வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் சென்றனர்.
மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
தலைவாசல்-20, ஆத்தூர், கரியகோவில்-16, ஆனைமடுவு-9, ஏற்காடு-5.2, வீரகனூர்-5, பெத்தநாயக்கன்பாளையம்-4, மேட்டூர்-3.2, கெங்கவல்லி-2.2, சேலம்-0.8.