தண்டவாள இணைப்பு பணிக்காக அந்தியோதயா, இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நெல்லையுடன் நிறுத்தம் - நாகர்கோவில் ரெயில் விருதுநகருடன் நிறுத்தம்
நெல்லை-நாகர்கோவில் இரட்டை அகலப்பாதை தண்டவாள இணைப்பு பணிக்காக இன்டர்சிட்டி, அந்தியோதயா மற்றும் நாகர்கோவில் ரெயில்கள் நெல்லை, விருதுநகருடன் நிறுத்தப்படுகின்றன.
நெல்லை-நாகர்கோவில் இரட்டை அகலப்பாதை தண்டவாள இணைப்பு பணிக்காக இன்டர்சிட்டி, அந்தியோதயா மற்றும் நாகர்கோவில் ரெயில்கள் நெல்லை, விருதுநகருடன் நிறுத்தப்படுகின்றன.
நெல்லையுடன்...
திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டத்திற்கு உள்பட்ட மேலப்பாளையம் -நாங்குநேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை அகலப்பாதைக்கான தண்டவாள இணைப்பு பணிகள் நடக்க உள்ளன. இதையடுத்து அந்தபாதையில் இயக்கப்படும் நாகர்கோவில்-தாம்பரம், திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நெல்லையுடன் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த ரெயில்களின் இயக்கத்தில் மேலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று(வியாழக்கிழமை) முதல் தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 18-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை இந்த ரெயில் (வ.எண்.20691) நெல்லை வரை மட்டும் இயக்கப்படும். அதேபோல, மறுமார்க்கத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் நெல்லை வரை பகுதியாக ரத்து செய்யப்பட்டிருந்த நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.20692) வருகிற 19-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நாகர்கோவிலில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு புறப்படும்.
விருதுநகர் வரை
அதேபோல, நாளை முதல் பகுதியாக ரத்து செய்யப்பட்டிருந்த திருச்சி -திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.22627) வருகிற 19-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நெல்லை வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் நாளை முதல் பகுதியாக ரத்து செய்யப்பட்டிருந்த திருவனந்தபுரம்-திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண். 22628) வருகிற 19-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக நெல்லையில் இருந்து வழக்கமான நேரத்துக்கு திருச்சி புறப்படும்.
இந்த ரெயில்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த 16,17 மற்றும் 18-ந் தேதிகளில் வழக்கம் போல இயக்கப்படும். தாம்பரம்-நாகர்கோவில் வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22657) வருகிற 22-ந் தேதி விருதுநகர் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் நாகர்கோவில்-தாம்பரம் வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22658) வருகுற 23-ந் தேதி நாகர்கோவிலுக்கு பதிலாக விருதுநகர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
சென்னை-நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12667) வருகிற 23-ந் தேியும், மறுமார்க்கத்தில் நாகர்கோவில்-சென்னை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12668) வருகிற 24-ந் தேதி ஆகிய நாட்களில் விருதுநகர்-நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் சென்னையில் இருந்து விருதுநகர் வரையிலும், மறுமார்க்கத்தில் விருதுநகரில் இருந்து சென்னைக்கும் இயக்கப்படும். மேற்கண்ட ரெயில்கள் அனைத்தும் மதுரை ரெயில் நிலையத்துக்கு வழக்கமான நேரத்துக்கு வந்து செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.