மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
அரசு பட்டா வழங்கிய இடம் குறித்த தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று செல்லகுமார் எம்.பி. தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம், வெங்கடாபுரம் ஊராட்சி கொத்தபேட்டா ஆதிதிராவிடர் காலனியில் கடந்த 1992-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் 11 பேருக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை அரசு வாங்கி 224 ஆதிதிராவிடர் மக்களுக்கு பட்டா வழங்கியது. அதே இடத்தில் 1998-ல் நடந்த தி.மு.க. ஆட்சியில் 54 அருந்ததியர் மக்களுக்கு பட்டா வழங்கியது. பட்டா வழங்கிய இடத்திற்கு முன்பு 2004-ல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைந்தது. இதனால் ஏற்கனவே பட்டா வழங்கிய நிலங்களின் மதிப்பு உயர்ந்ததால் இடத்தை அரசுக்கு விற்றவர்கள் தாங்கள் பெற்ற பணத்தை நீதிமன்றத்தில் செலுத்தி தாங்கள் வழங்கிய இடத்திற்கு மிகவும் குறைந்த பணம் வழங்கியதாகவும், எனவே அந்த இடத்தை தங்களுக்கே மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்றும் கடந்த 2012-ல் வழக்கு தொடுத்தனர். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான இந்த தீர்ப்பில் நிலத்தை விற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், 15 நாட்களில் வீட்டை காலி செய்ய வேண்டும் என்றும் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இதையடுத்து அரசு பட்டா வழங்கிய இடத்தில் வீடுகள் கட்டி குடியிருப்பவர்கள், கிருஷ்ணகிரி செல்லக்குமார் எம்.பி.யிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இதையடுத்து பட்டா பெற்றவர்களிடம் இது குறித்து செல்லகுமார் எம்.பி. ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு 278 பேருக்கு அரசு பட்டா வழங்கி பொதுமக்கள் வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர். அரசாங்கத்திடம் இடம் விற்ற பிறகு, மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைந்தவுடன், பணம் போதவில்லை எனக்கூறி நிலத்தை விற்றவர்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர். இந்த நிலையில் நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கி உள்ளது. மாவட்ட கலெக்டரிடம் இதுகுறித்து பேசியபின், நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும். தொடர்ந்து போராடி பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீண்டும் இந்த இடத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அப்போது காங்கிரஸ் மாவட்ட தலைவர் நடராஜன், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு அமைப்பாளர் ஆறுமுக சுப்பிரமணியம், முன்னாள் மாவட்ட தலைவர் ஜேசுதுரை, நகர தலைவர் லலித் ஆண்டனி மற்றும் பலர் உடன் இருந்தனர்.