தனி நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு:குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் கோவில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க தடை- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்கீழ் கோவில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்தது.
குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்கீழ் கோவில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்தது.
அர்ச்சகர் தொடர்ந்த வழக்கு
நெல்லையை சேர்ந்த பெரியநம்பி நரசிம்ம கோபாலன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "நான் அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள ராஜகோபால சுவாமி குலசேகர ஆழ்வார் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறேன். இந்த கோவிலில் அர்ச்சகர்கள், மணியம், பேஷ்கார், ஓதுவார், தவில், நாதசுவர கலைஞர்கள் ஆகியோருக்கு சம வேலை, சமமான சம்பளம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி எங்களுக்கு சம்பளம் வழங்க உத்தரவிட வேண்டும். இதை தடுக்கும் வகையிலான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறி இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கட்டிடக்கலை மற்றும் கலாசார மதிப்புடன் கோவில்கள் விளங்குகின்றன. அவற்றை பாதுகாத்து பராமரிப்பது அவசியம். இந்த நடவடிக்கைகளை கோவில் ஊழியர்கள்தான் செய்ய முடியும். கோவில்களை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கும், சட்டப்படி சம்பளம் வழங்க 8 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டார்.
மேல்முறையீடு
இந்த உத்தரவை எதிர்த்து அறநிலையத்துறை சார்பில் மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவில், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் தனி வருமானத்தின் அடிப்படையில்தான் அங்குள்ள ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. எனவே இதுதொடர்பான தனி நீதிபதி உத்தரவு ஏற்புடையதல்ல, என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
குறைந்த வருமானம்
அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன், அரசு வக்கீல் எஸ்.பி.மகாராஜன் ஆகியோர் ஆஜராகி, தமிழகத்தில் உள்ள சில கோவில்களில்தான் அதிக வருமானம் உள்ளது. பெரும்பாலான கோவில்களில் குறைந்த வருமானம்தான் கிடைக்கிறது.
அந்தந்த கோவில் வருமானத்தின் அடிப்படையில்தான் அங்குள்ளவர்களுக்கு சம்பளம் வழங்க முடியும். அனைத்து கோவில்களையும் ஒரே நிர்வாகத்தின்கீழ் கொண்டு வர இயலாது. எனவே சட்டப்படியான சம்பளம் என்பது கோவிலில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பொருந்தாது. அவர்களுக்காக கோவில் பணியாளர்கள் நல நிதியம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினார்கள்.
தனி நீதிபதி உத்தரவுக்கு தடை
அரசு வக்கீல்களின் வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கோவில் ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியச்சட்டத்தின்கீழ் சம்பளம் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்தனர். இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.