களக்காடு-முண்டந்துறை பகுதியில் விடக்கூடாது என நீதிபதிகளிடம் முறையீடு:அரிக்கொம்பன் யானையால் ஏற்பட்ட சேதத்துக்கு நிவாரணம் வழங்க கணக்கீடு - மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பு தகவல்
அரிக்கொம்பன் யானையால் ஏற்பட்ட சேதத்துக்கு நிவாரணம் வழங்க கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது என மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அரிக்கொம்பன் யானையால் ஏற்பட்ட சேதத்துக்கு நிவாரணம் வழங்க கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது என மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
யானையால் பயிர்கள் சேதம்
தேனியைச் சேர்ந்த கோபால், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த 27.4.2023 முதல் கேரளா மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த அரிக்கொம்பன் என்ற யானை, தேனி மாவட்டம் கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சுற்றியது.
அரிக்கொம்பன் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், அதன் மூலம் மக்களுக்கு இடையூறு ஏற்படாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கேரள வனத்துறைக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ஆனால், அரிக்கொம்பன் யானையினால் தமிழ்நாட்டிலுள்ள கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாய பொருட்கள் சேதம் அடைந்தன. மக்கள் தாக்கப்பட்டனர். கம்பம் நகரில் வாகனங்களையும் சேதப்படுத்தியது. இதனால் ஏராளமானவர்கள் பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
எனவே, தேனி வன அலுவலர் குழு ஒன்றை ஏற்படுத்தி அரிக்கொம்பன் யானையால் ஏற்பட்ட சேதத்தை கணக்கீடு செய்து நிவாரணம் வழங்கவும், அரிக்கொம்பன் யானையை பிடித்து கேரள அரசிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட வேண்டும்.
வேட்டையாடுங்கள்
மீண்டும் அரிக்கொம்பன் யானை தமிழ்நாட்டிற்கு வர விடாத வண்ணம் கேரள அரசு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.
கேரள அரசு இதனை ஏற்க மறுக்கும்பட்சத்தில் வனவிலங்கு சட்டத்தின்படி மனித உயிர் மற்றும் பொருட்களுக்கு ஆபத்தை விளைவிப்பதால் அரிக்கொம்பன் யானையை வேட்டையாட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், அரிக்கொம்பன் யானையால் ஏற்பட்ட சேதத்துக்கு நிவாரணம் வழங்க கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அரிக்கொம்பன் யானையை களக்காடு-முண்டந்துறை அடர்ந்த காட்டுப் பகுதியில் விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
நடவடிக்கை
இதற்கிடையே பிடிபட்ட அரிக்கொம்பன் யானையை கேரள வனத்துறையில் ஒப்படைக்க வேண்டும். களக்காடு முண்டந்துறை பகுதியில் விடக்கூடாது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு கேரள மாநிலத்தை சேர்ந்த ஜோசப் என்பவரது சார்பாக வக்கீல்கள் முறையீடு செய்தனர். அதற்கு நீதிபதிகள், உங்களின் முறையீடு குறித்து மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.
அதற்கு அரசு வக்கீல் ஆஜராகி, மயக்க ஊசி செலுத்தி அரிக்கொம்பன் யானை பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது யானை வனப்பகுதியில் விடுவதற்காக கொண்டு செல்லபடுகிறது என்றார்.
இதனை தொடர்ந்து நீதிபதிகள், மனுதாரர் முறையீட்டு வழக்கை நாளை (அதாவது இன்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்வோம் என்று தெரிவித்தனர்.