வேளாண் எந்திரங்கள் பராமரிப்பு மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்


வேளாண் எந்திரங்கள் பராமரிப்பு மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
x

50 சதவீத மானியத்தில் வேளாண் எந்திரங்கள் மற்றும் சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் அமைக்க விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் விண்ணப் பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை,

50 சதவீத மானியத்தில் வேளாண் எந்திரங்கள் மற்றும் சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் அமைக்க விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

பம்புசெட்டு

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள அறிக்கையில் கூறிஉள்ளதாவது:-

தமிழக அரசு வேளாண் பொறியியல் துறையின் மூலம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண் எந்திரங்கள் மற்றும் சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் மானியத்தில் அமைக்கும் திட்டத்தை கடந்த 2021-2022-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

விவசாயிகள் தங்கள் வேளாண் எந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை தங்கள் விளை நிலங்களிலேயே பழுதுநீக்கி பராமரிக்கவும், விவசாயிகள் வேளாண் பணிகளை எவ்வித இடர்பாடுகளுமின்றி குறித்த நேரத்தில் செய்யவும், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி, நிலையான வருமானம் ஈட்டி பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் இந்த மையங்கள் அமைக்கப்படுகின்றன.

மானியம்

தொழில் முனைவோர், விவசாயகுழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இந்த மையங்கள் மானியத்தில் அமைத்துத்தரப்படும். இந்த மையங்கள் ரூ.8 லட்சம் செலவில் அமைக்கப்படுகின்றன. இதில் 50 சதவீத மானியம் அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.4 மானியம் வழங்கப்படும்.

மையங்கள் அமைக்க போதிய இடவசதியும், மும்முனை மின்சார இணைப்பும் கொண்ட கிராமப்புற இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் பகுதி வேளாண் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பத்தினை அளிக்கலாம்.

மாவட்ட கலெக்டர் தலைமையிலான மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளிகளுக்கு இந்த மையம் மானியத்தில் அமைத்துத் தரப்படும். மையங்கள் அமைக்க தேவையான எந்திரங்கள் ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் கண்காணிப்பு பொறி யாளரால் முடிவு செய்யப்பட்டு, பயனாளிகள் மொத்த தொகையை செலுத்தி வாங்கி கொள்ளலாம்.

விவரம்

பின்னர் சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர் மையத்தினை நேரில் ஆய்வு செய்து, திருப்தி அளிக்கும் வகையில் இருப்பின் மானிய தொகையை பயனாளியின் வங்கிக்கணக்கில் பின்னேற்பு மானியமாக செலுத்தப்படும். மேலும், விவரங்களுக்கு தங்கள் பகுதிக்கு உட்பட்ட வேளாண்மைப் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தினை அணுகி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story