தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்


தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்
x

நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்புவோர் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தற்காலிக பட்டாசு கடைகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் உரிய நிபந்தனைகளை பின்பற்றி இணையதளம் வழியாக மட்டும் அடுத்தமாதம் (அக்டோபர்) 24-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மாவட்டத்திலுள்ள அனைத்து பொது இ-சேவை மையங்களில் இதற்கான விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பத்துடன், விண்ணப்பதாரரின் கடவுச் சீட்டு அளவு புகைப்படம், விண்ணப்பதாரரின் முகவரி குறித்த ஆவணம் (ஆதார் அட்டை), அடையாள அட்டையாக வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் ஏதாவது ஒன்றை இணைக்க வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

உரிமக் கட்டணம் ரூ.600 அரசு கருவூல செலுத்துச் சீட்டு மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்திய செலுத்துச்சீட்டு (அசல்), பதிவு செய்யப்பட்ட குத்தகை ஆவணம், சொந்தக் கட்டிடம் எனில் மனுதாரர் பெயரில் உள்ள பட்டா (அல்லது) வாடகை கட்டிடம் எனில் வாடகை ஒப்பந்தப்பத்திரம், உள்ளாட்சி அமைப்பினரிடமிருந்து பெற்ற பல்வகை வரி ரசீது, சுய உறுதிமொழி பத்திரம், கட்டிட அமைவிட வரைபடம் (அல்லது) கட்டிட திட்ட அனுமதி ஆகியவற்றை இணைத்து இணையதளம் வாயிலாக அக்டோபர் மாதம் 24-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்தை கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

உரிமக் கட்டணம் ரூ.600-ஐ அரசு கணக்கு தலைப்பில் IFHRMS என்ற இணையதளம் வாயிலாக செலுத்தி அதற்கான அசல் செலுத்துச்சீட்டு இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பம் ஏற்கப்பட்டதெனில் தற்காலிக உரிமத்தையும், நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான ஆணையையும் இணையதளம் மூலமாகவே மனுதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

பாதுகாப்பான இடம்

தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் கேட்டு விண்ணப்பம் அளிப்போர், பொதுமக்களுக்கு சிரமமில்லாத, ஆட்சேபனையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும், விபத்து இல்லாத மகிழ்ச்சியான தீபாவளி பண்டிகையை கொண்டாடிட ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story