அரசு இசைப்பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்


அரசு இசைப்பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 13 May 2023 12:15 AM IST (Updated: 13 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அரசு இசைப்பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அரசு இசைப்பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாணவர் சேர்க்கை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2023-2024-ம் கல்வியாண்டிற்கான மாணவ-மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இப்பள்ளியில் சேர வயது வரம்பு 13 வயது முதல் 25 வயது வரை இருக்க வேண்டும்.

குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய துறைகளில் பயிலுவதற்கு 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நாதசுரம், தவில், தேவாரம் ஆகிய துறைகளில் பயில எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானதாகும்.

ஆண்டு கட்டணம்

இசைப்பள்ளி சான்றிதழ் படிப்பின் கால அளவு 3 ஆண்டுகள் ஆகும். இதில் பயில ஆர்வமுள்ள மாணவர்கள் ஆண்டுக் கட்டணமாக ரூ.350 செலுத்திட வேண்டும். இங்கு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் தோறும் ரூ.400 கல்வி உதவித் தொகை வழங்கப்படும். மேலும் வெளியூர் மாணவர்கள் அரசு விடுதியில் இலவசமாக தங்கி பயிலவும், பஸ்களில் பயணம் செய்ய இலவச பஸ் கட்டண வசதியும் செய்து தரப்படும்.

3 ஆண்டுகள் படித்து அரசு தேர்வுகள் இயக்ககம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் இசைக்கச்சேரிகள் நடத்தவும், நாதசுரம், தவில் கலைஞராக வாசித்து தொழில் புரியவும், தேவார ஓதுவாராக கோவில்களில் பணிபுரியவும், வானொலி, தொலைக்காட்சிகளில் நடத்தப்பெறும் இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன.

முன்னுரிமை

மேலும் அறநிலையத்துறை கோவில்களில் நாதசுரம், தவில், தேவார பணியிடங்கள் இசைப்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு பணியமர்த்தப்படுகிறார்கள். இந்த ஆண்டு முதல் இசை ஆசிரியர் பணிக்கு வளாக நேர்காணல் மூலம் தனியார் பள்ளிகளில் வேலை வாய்ப்பு பெறுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த கலை ஆர்வம் மிக்க மாணவ,மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். ேமலும் விவரங்களுக்கு தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, எண்:5/19, புழுகாப்பேட்டை தெரு, சீர்காழி- 609110 என்ற முகவரியிலும், 04364-274611 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story