பொருளாதார மேம்பாட்டு கழக திட்டங்களில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்


பொருளாதார மேம்பாட்டு கழக திட்டங்களில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்
x

பொருளாதார மேம்பாட்டு கழக திட்டங்களில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை

கடன் திட்டங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பொருளாதார மேம்பாடு அடைய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். பொதுகால கடன் திட்டம், தனி நபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதத்திலிருந்து 8 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது.

பால் உற்பத்தியாளர்கள் சங்கம்

பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் அதிகப்பட்சமாக ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம் ஆகும். நுண் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு மகளிர் உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.¼ லட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதமாகும். மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். திட்ட அலுவலரால் (மகளிர் திட்டம்) தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

நுண் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள ஆடவருக்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.1¼ லட்சம் வரையும், ஒரு குழுவிற்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.15 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம் ஆகும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் வீதம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதமாகும்.

கூட்டுறவு சங்கங்கள்

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து சாதி, வருமானம் மற்றும் பிறப்பிட சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story