தேசிய பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
தேசிய பெண் குழந்தைகள்விருது பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், 18 வயது வரை பெண் குழந்தைகள் கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும் பாடுபட்டு, வீர தீர செயல் புரிந்த 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் பாராட்டு பத்திரமும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், தமிழ்நாடு அரசால் 2023-24-ம் ஆண்டிற்கு வழங்கப்படும் தேசிய பெண் குழந்தைகள் விருதிற்கு தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்ட 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். இவ்விருது பெற விண்ணப்பிக்கும் நபர்கள் பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான/தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும். அவ்வாறு சிறந்த செயல்களில் ஈடுபட்ட பெண் குழந்தைக்கு தமிழக அரசின் பாராட்டு பத்திரம் மற்றும் ரூ.1 லட்சம் காசோலை வழங்கப்படும். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடையோர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம், என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.