தேசிய பெண் குழந்தை விருது பெற விண்ணப்பிக்கலாம்


தேசிய பெண் குழந்தை விருது பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 9 Nov 2022 12:15 AM IST (Updated: 9 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய பெண் குழந்தை விருது பெற விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம்

விழுப்புரம்

ஒவ்வொரு ஆண்டும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், குழந்தை திருமணங்களை தடுக்கவும் பாடுபட்டு வீர தீர செயல்புரிந்த 5 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜனவரி 24) அன்று "தேசிய பெண் குழந்தை விருது" வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையும், பாராட்டு பத்திரமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு தகுதியுடையவர் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 5 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தையாகவும் இருக்க வேண்டும். பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான, தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள், கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தியிருத்தல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பன போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் ஆகிய தகுதிகளை கொண்டிருத்தல் வேண்டும்.

விருதுக்கான விண்ணப்பங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர், காவல்துறை, தொண்டு நிறுவனங்கள் உள்பட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் உரிய முன்மொழிவுகளுடன் மாவட்ட சமூகநல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டரின் பரிந்துரையுடன் சமூகநல இயக்குனரகத்துக்கு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும். மாவட்டங்களிலிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மாநில அளவில் தேர்வுக்குழு மூலம் பரிசீலனை செய்யப்பட்டு அனைத்து தகுதிகள் பெற்ற பெண் குழந்தை தேர்வு செய்யப்பட்டு வருகிற ஜனவரி 24-ந் தேதி மாநில விருது வழங்கப்படும். இவ்விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்பிக்க இறுதி நாள் 21.11.2022 ஆகும். அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

இந்த தகவல் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story