கிராம, நகர்ப்புறத்தில் புதிய தொழில்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம்
கிராம, நகர்ப்புறத்தில் புதிய தொழில்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம்
திருப்பூர்
கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறத்தில், புதிய தொழில்கள் தொடங்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் வினீத் அறிவித்துள்ளார்.
புதிய தொழில் தொடங்க மானியம்
பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறத்தில் புதிய தொழில்கள் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கி வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்தில் திருப்பூர் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் அதிகபட்ச திட்ட மதிப்பீடாக உற்பத்தி துறை சார்ந்த தொழில்களுக்கு ரூ.50 லட்சமும், சேவைத்துறை சார்ந்த தொழில்களுக்கு ரூ.20 லட்சமும் வழங்கப்படும். பொதுப்பிரிவினரில் (ஆண்கள்) நகர்ப்புறத்தில் திட்ட மதிப்பீட்டில் 15 சதவீதமும், கிராமப்புற திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதமும் மானியமாக வழங்கப்படும். 10 சதவீதம் சொந்த முதலீடாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு நகர்ப்புறத்தில் 25 சதவீதமும், கிராமப்புறத்தில் 35 சதவீதமும் மானியமாக வழங்கப்படும். திட்ட மதிப்பில் 5 சதவீதம் சொந்த முதலீடாக இருக்க வேண்டும்.
ஆயத்த ஆடை உற்பத்தி
பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் தொடர்புடைய தொழில்கள், டிஜிட்டல் பிரிண்டிங் மற்றும் தொடர்புடைய தொழில்கள், கழிவு ஆடைகளில் இருந்து பருத்தி உற்பத்தி மற்றும் தொடர்புடைய தொழில்கள், சாம்பல் கல் உற்பத்தி, பேவர் பிளாக் சிமெண்ட் கல், இண்டர்லாக்கிங் பிரிக்ஸ், தென்னை நார் கயிறு சம்பந்தப்பட்ட தொழில்கள், யார்ன் டப்லிங், எண்ணெய் மில், மாவு மில், யு.பி.வி.சி. கதவு மற்றும் ஜன்னல் தயாரித்தல், அழகு கலைநிலையம், வீடியோ, போட்டோ தொழில், சலூன் கடை போன்ற தொழில்களுக்கும், மேலும் கோழிப்பண்ணை, மாட்டுப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, தேங்காய் களம், மீன் பண்ணை, பட்டுப்புழு வளர்ப்பு போன்ற அனைத்து தொழில்களுக்கும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், திருப்பூர் என்ற முகவரிக்கும், 0421 2475007 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, சாதிச்சான்றிதழ், கல்வி தகுதிச்சான்று, ஜி.எஸ்.டி.யுடன் கூடிய விலைப்பட்டியல், திட்ட அறிக்கையுடன் www.kviconline.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
----