மானியவிலையில் பவர்டில்லர் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்
மானியவிலையில் பவர்டில்லர் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வேளாண் எந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் உழவு பணிகளுக்கு 2-வது தவணையாக பொதுப்பிரிவினருக்கு 53, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 20 என்று மொத்தம் 73 பவர்டில்லர் எந்திரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிறு, குறு, பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆகிய விவசாயிகளுக்கு 50 சதவீதம், இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. 2022-23-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களில் முன்னுரிமை அடிப்படையில் பின்னேற்பு மானியம் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
பவர்டில்லர் எந்திரம் பெற விருப்பமுள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், சிறு, குறு விவசாய சான்று, ஆதார் அட்டை நகல், பவர்டில்லர் எந்திரத்தின் விலைப்புள்ளி, வங்கிக்கணக்கின் முதல் பக்கம் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளாக இருப்பின் சாதி சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் வேலூர் தொரப்பாடி தந்தை பெரியார் அரசு பாலிடெக்னில் கல்லூரி எதிரே உள்ள வேளாண் பொறியியல் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
இந்த தகவலை வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.