விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்


விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
x

கரூர் மாவட்டத்தில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

கரூர்

சிறப்பு உதவித்தொகை

மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சிறப்பு உதவித்தொகை வழங்கும் திட்டம் 3 வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள விளையாட்டுக்கள் மட்டும்) அதிகபட்சம் 5 பேர் வரை ஓர் ஆண்டுக்கு மட்டும் அதிகபட்ச உதவித்தொகை ரூ.25 லட்சம் வரை வழங்கப்படும். பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் அதிகபட்சம் 50 பேருக்கு, 5 மாற்றுத்திறனாளிகள் உள்பட ஓர் ஆண்டுக்கு மட்டும் அதிகபட்ச உதவித்தொகை ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும். 1.12.2022 அன்று 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் அதிகபட்சம் 100 பேருக்கு மிகாமல், 10 மாற்றுத்திறனாளிகள் உள்பட ஓர் ஆண்டுக்கு மட்டும் அதிகபட்ச உதவித்தொகை ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும். 1.12.2022 அன்று 20 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இந்த திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.t.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்களை வருகிற 15-ந்தேதி மாலை 5 மணி வரை சமர்பிக்கலாம்.

ஏற்கனவே அஞ்சல் வழியில், நேரடியாக விண்ணப்பித்திருந்தாலும் மீண்டும் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழியில் வரும் விண்ணப்பங்களை தவிர பிற விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்படமாட்டாது. மேலும் விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் குறித்த விவரங்களுக்கு www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் ஆடுகளம் தகவல் மையத்தினை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story