மானியத்தில் பனை விதைகள்-கன்றுகள் பெற விண்ணப்பிக்கலாம்
மானியத்தில் பனை விதைகள்-கன்றுகள் பெற விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாநில மரமான பனைமரம் தமிழர்களின் வாழ்வோடும், வரலாற்றோடும் இணைந்த மரமாக இருக்கிறது. பனைமரம் நிலத்தடி நீரை அதிகரித்தல், மண் அரிப்பை தடுத்தல் என மண்ணிற்கு உகந்த மரமாக திகழ்வதுடன் அடிமுதல் நுனிவரை பயனளித்து பலருக்கும் வாழ்வாதாரமாக விளங்குகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் பனை சாகுபடியை ஊக்குவிப்பதற்காகவும், பனை சாகுபடி செய்துவரும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் நடப்பு நிதியாண்டில் பெரம்பலூர் மாவட்ட தோட்டக்கலை துறைக்கு இலக்காக 30 ஆயிரம் பனை விதைகள் மற்றும் 125 பனை கன்றுகள் மானியத்தில் வினியோகம் செய்ய ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 500 நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 50 பனை விதைகள் மற்றும் 10 பனை கன்றுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளன. பொது இடங்களில் தொண்டு நிறுவனங்கள், ஊராட்சி மன்றங்கள் மூலம் நடுவதற்கு அதிகபட்சமாக 100 பனை விதைகள், 30 பனை கன்றுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகியோ அல்லது https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/registration என்ற இணையதளத்தில் பதிவு செய்தோ பயன்பெறலாம், என மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.