285 டெங்கு ஒழிப்பு மஸ்தூர் பணியாளர்கள் நியமனம்
விருதுநகர் மாவட்டத்தில் வருகிற ஏப்ரல் மாதம் டெங்கு பாதுகாப்பு நடவடிக்கைகாக 285 மஸ்தூர் பணியாளர்களை நியமிக்க கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் வருகிற ஏப்ரல் மாதம் டெங்கு பாதுகாப்பு நடவடிக்கைகாக 285 மஸ்தூர் பணியாளர்களை நியமிக்க கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.
மஸ்தூர் பணியாளர்கள்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு பாதுகாப்பு மற்றும் கொசுக்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் பணிக்காக 11 யூனியன்ளிலும் கடந்தாண்டு இறுதிவரை 570 மஸ்தூர் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
இவர்களுக்கு ரூ.428 தினசரி ஊதியமாக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஏப்ரல் மாதம் 285 மஸ்தூர் பணியாளர்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். இதில் ராஜபாளையம் யூனியனில் மட்டும் 30 பணியாளர்களும், மற்ற 10 யூனியங்களிலும் தலா 25 பணியாளர்களும் நியமனம் செய்யப்பட வேண்டும். இதற்கான நிபந்தனைகளாக குறைந்தபட்ச கல்வி தகுதி உடைய நபர்களை பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
தற்காலிக நியமனம்
நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. களப்பணியில் ஈடுபடுத்தப்படும் பணியாளர்கள் ஒரு மாதத்திற்கு மேல் பணிகள் தொடர அனுமதிக்க கூடாது. இப்பணியாளர்கள் தினமும் 8 மணி நேரம் பணி செய்ய பணிபுரியும் நாட்களுக்கு மட்டுமே தினக்கூலிஅனுமதிக்கப்பட வேண்டும்.
பணியாளர் விடுப்பு எடுத்தால் தினக்கூலி வழங்க கூடாது. மஸ்தூர் பணியாளர்கள் பணி நிரந்தரம், பனி மூப்பு போன்ற உரிமைகள் கோர இயலாது. தினக் கூலி பட்டியல் பராமரிக்கப்பட வேண்டும். மருத்துவ பணியாளர் பணிபுரியும் இடம் குறித்து முன்கூட்டியே பயணத்திட்டம், வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் வட்டார சுகாதார ஆய்வாளர்கள் கலந்தாலோசித்து அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.
கண்காணிக்க வேண்டும்
தினக்கூலி பணியாளர்கள் பணி புரியும் கிராமம் குறித்து பதிவேடு பராமரிக்க வேண்டும். மேற்படி பணியாளர்களை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்காணிப்பில் பஞ்சாயத்து வாரியாக, தேதிகள் நிர்ணயம் செய்து பட்டியலிட்டு பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.
மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் கிராம பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையில் முறையாக தற்காலிக பணியாளர்களால் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.