விவசாயிகள் லாபகரமான மகசூல் பெற வட்டாரத்துக்கு ஒரு வேளாண் விஞ்ஞானி பொறுப்பு அலுவலராக நியமனம்
விவசாயிகள் லாபகரமான மகசூல் பெற, வட்டாரத்துக்கு ஒரு வேளாண் விஞ்ஞானியை பொறுப்பு அலுவலராக நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழக சட்டசபையில் கடந்த வேளாண்மை பட்ஜெட்டில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், வேளாண்மை, தோட்டக்கலை பயிர்களில் வெளியிடப்பட்ட உயர் மகசூல் ரகங்கள், சாகுபடி தொழில்நுட்பங்கள், பூச்சி நோய்களை கட்டுப்படுத்துவதற்கான பயிர் பாதுகாப்பு முறைகள், நவீன எந்திரங்கள் மதிப்பு கூட்டி விற்பனை செய்வதற்கான யுக்திகள் போன்றவற்றுக்கு விஞ்ஞான ரீதியிலான ஆலோசனைகளை விவசாயிகளுக்குநேரடியாக வழங்குவதற்காக வேளாண் கல்லூரிகள், வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் ஆகியவற்றுக்கு ஒரு வேளாண் விஞ்ஞானி பொறுப்பு அலுவலராக நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதத்தில், இதற்கான கடிதத்தை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பதிவாளருக்கு (கோயம்புத்தூர்) வேளாண்மை உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரசு அனுமதி
வேளாண்மை தொடர்பான அனைத்து தகவல்களையும், விஞ்ஞான ரீதியிலான ஆலோசனைகளையும் வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு நேரடியாக வழங்குவதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் வேளாண் கல்லூரிகள், வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண் அறிவியல் நிலையங்கள் ஆகியவற்றில் இருந்து, ஒரு வேளாண் விஞ்ஞானியை ஒவ்வொரு வட்டாரத்துக்கும் பொறுப்பு அலுவலராக பணி அமர்த்துவதற்கு அனுமதி வழங்கி அரசு ஆணையிடுகிறது.
இந்த விஞ்ஞானிகள் அந்த வட்டாரத்தில் பெய்யும் மழை, மண்ணின் தன்மை, பயிர் சாகுபடி, கடந்த ஆண்டில் பூச்சி மற்றும் நோய் தாக்கிய விவரங்கள், பயிரில் இருந்து கிடைக்கும் மகசூல், விற்பனை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு புள்ளி விவரங்களை சேகரித்து, அந்த வட்டாரத்தில் விவசாயிகள் லாபம் தரும் வகையில் மகசூல் பெற மாற்றுப் பயிர்களை உள்ளடக்கி பயிர் சாகுபடி திட்டம் ஒன்றை தயாரித்து அதை விவசாயிகளுக்கு அறிவுரையாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.