பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை கண்காணிக்க அலுவலர்கள் நியமனம்


பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை கண்காணிக்க அலுவலர்கள் நியமனம்
x

தர்மபுரி மாவட்டம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை கண்காணிக்க சிறப்பு மேற்பார்வை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கண்காணிப்பு சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி

பொங்கல் பரிசு தொகுப்பு

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும், கொண்டாட வழிவகை செய்யும் வகையில் பொது வினியோக திட்டத்தின் கீழ் அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் வசிக்கும் அனைத்து குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு வழங்கும் பணி தொடங்குகிறது. தர்மபுரி மாவட்டம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தரமான பொருட்கள்

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளை கண்காணிக்கவும், மேற்பார்வை செய்யவும், தகுதியான நபர்களுக்கு தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும், தர்மபுரி மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா தலைமையில் ஒவ்வொரு தாலுகாவிற்கும் உதவி கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தர்மபுரி தாலுகாவிற்கு வருவாய் கோட்ட அலுவலர் கீதாராணி, பென்னாகரம் தாலுகாவிற்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவிதா, பாலக்கோடு தாலுகாவிற்கு சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, நல்லம்பள்ளி தாலுகாவிற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் ராஜேந்திரன், காரிமங்கலம் தாலுகாவிற்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார், அரூர் தாலுகாவிற்கு வருவாய் கோட்ட அலுவலர் ராஜசேகரன், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவிற்கு பழங்குடியினர் நல திட்ட அலுவலர் ரமேஷ்குமார் ஆகியோர் சிறப்பு மேற்பார்வை அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தனி தாசில்தார் நிலையில் நடமாடும் கண்காணிப்பு சிறப்பு குழு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொங்கல் பரிசு தொகுப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வழங்கப்படுவதை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க நாள் ஒன்றுக்கு 200 முதல் 250 அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் வகையில், கடந்த 3-ந் தேதி முதல் டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தகுதியான அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்படும். ரேஷன் கார்டுகளில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணத்தை பெற்றுக்கொள்ளலாம். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டதும் அவர்களது செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story