சென்னை ஐகோர்ட்டின் பொறுப்புத் தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமனம்
சென்னை ஐகோர்ட்டின் பொறுப்புத் தலைமை நீதிபதியாக வைத்தியநாதனை நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் பொறுப்புத் தலைமை நீதிபதியாக பதவி வகித்த ராஜா நேற்றுடன் ஓய்வுபெற்றார். இதையடுத்து புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக, ஐகோர்ட்டின் மூத்த நீதிபதி எஸ்.வைத்தியநாதனை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் இன்று (வியாழக்கிழமை) தனது பணிகளை மேற்கொள்ள உள்ளார்.
சட்டப்படிப்பு
1962-ம் ஆண்டு ஆகஸ்டு 17-ந்தேதி பிறந்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள சிங்காரம்பிள்ளை உயர் நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பையும், அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரத்தில் பட்டப்படிப்பையும், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பையும், தொழிலாளர் நலம், தனிநபர் மேலாண்மை, தொழிலக உறவுகள் ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார்.
தொழிற்சங்கம்
கடந்த 1986-ம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்து சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியைத் தொடங்கினார். இவரது தாத்தா எல்.எஸ்.வைத்யநாதன் சென்னை ஐகோர்ட்டில் கண்காணிப்பாளராக பணியாற்றியவர். இவரது தந்தை வி.சுப்பிரமணியன், இந்தியாவில் ஒயிட் காலர் ஊழியர்களுக்கான முதல் தொழிற்சங்கமான கமர்சியல் எம்பிளாயீஸ் அசோசியேசன் என்ற சங்கத்தை 1946-ம் ஆண்டு தொடங்கியவர். அதுமட்டுமல்ல மெட்ராஸ் புத்தக ஏஜென்சியின் வெளியீடான தொழிலாளர் சட்டம் தொடர்பான புத்தகங்களின் பதிப்பக ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
மறைந்த வி.சுப்பிரமணியத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு 100-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
நீதிபதி எஸ்.வைத்தியநாதன் கடந்த 2013-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, கடந்த 2015-ம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.