வேலைவாய்ப்பு முகாமில் 2 ஆயிரத்து 417 பேருக்கு பணி நியமன ஆணை; அமைச்சர்கள் வழங்கினர்


வேலைவாய்ப்பு முகாமில் 2 ஆயிரத்து 417 பேருக்கு பணி நியமன ஆணை; அமைச்சர்கள் வழங்கினர்
x

ஒட்டன்சத்திரத்தில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 2 ஆயிரத்து 417 பேருக்கு பணி நியமன ஆணையை அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, சி.வே.கணேசன் ஆகியோர் கூட்டாக வழங்கினர்.

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 2 ஆயிரத்து 417 பேருக்கு பணி நியமன ஆணையை அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, சி.வே.கணேசன் ஆகியோர் கூட்டாக வழங்கினர்.

வேலைவாய்ப்பு முகாம்

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம், ஒட்டன்சத்திரத்தில் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் சுமார் 300 தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு, தங்களது நிறுவன பணிகளுக்கு தேவையான இளைஞர்களை தேர்வு செய்தனர்.

பின்னர் வேலைவாய்ப்பு பெற்ற இளைஞர், இளம்பெண்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் விசாகன் முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் இ.பெரியசாமி (கூட்டுறவுத்துறை) அர.சக்கரபாணி (உணவுத்துறை), சி.வே.கணேசன் (தொழிலாளர் நலத்துறை) ஆகியோர் தலைமை தாங்கி, வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 2 ஆயிரத்து 417 பேருக்கு பணி நியமன ஆணையை கூட்டாக வழங்கினர். அதேபோல் முன்கள பணியாளர்கள் மற்றும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

போட்டித்தேர்வுக்கு பயிற்சி

பின்னர் விழாவில் அமைச்சர் பெரியசாமி பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும் வகையில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற வீடுதேடி வேலைவாய்ப்பு வழங்கும் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும். மேலும் அரசு துறைகளிலும் வேலைவாய்ப்புகள் உள்ளன. இதனால் போட்டி தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் தொழிலாளர் நலத்துறை சார்பில் அந்தந்த மாவட்டங்களில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.

அமைச்சர் அர.சக்கரபாணி பேசும்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நான் முதல்வன்' என்ற திட்டத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார். படித்து வேலை தேடுபவர்களுக்கு வானத்தை தொடும் அளவிற்கு எண்ணங்கள் உயர்வாக இருக்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். படித்த அனைவருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கி தருவது தி.மு.க. அரசின் பொறுப்பு, கடமை. அதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

ஒட்டன்சத்திரத்தில் தொழிற்பயிற்சி நிலையம்

பின்னர் அமைச்சர் சி.வே.கணேசன் பேசுகையில், தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 58 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதன்மூலம் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். வருகிற ஆகஸ்டு 15-ந்தேதிக்குள் ஒரு லட்சம் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தரும் வகையிலும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஏற்கனவே 91 தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. தற்போது 11 தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று ஒட்டன்சத்திரத்தில் தொடங்கப்பட உள்ளது என்றார்.

இந்த விழாவில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவராவ், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, எம்.எல்.ஏ.க்கள் காந்திராஜன், இ.பெ.செந்தில்குமார், ஒட்டன்சத்திரம் நகர தி.மு.க. செயலாளர் வெள்ளைச்சாமி, மாவட்ட அவைத்தலைவர் மோகன், ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பொன்ராஜ், நகராட்சி தலைவர் திருமலைசாமி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜ், ஒன்றியக்குழு தலைவர்கள் சத்தியபுவனா, அய்யம்மாள், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் ஜெகதீசன், மண்டல இயக்குனர் தேவேந்திரன், திட்ட அலுவலர் சரவணன், ஆர்.டி.ஓ. சிவக்குமார், நகராட்சி ஆணையாளர் தேவிகா, தாசில்தார் முத்துசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story