ஊரக வளர்ச்சித்துறையில் கருணை அடிப்படையில் 6 பேருக்கு பணி நியமன ஆணை-கலெக்டர் கார்மேகம் வழங்கினார்
ஊரக வளர்ச்சித்துறையில் கருணை அடிப்படையில் 6 பேருக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
குறைதீர்க்கும் கூட்டம்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன், கல்வி உதவித்தொகை, திருமண நிதிஉதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 480 மனுக்கள் வழங்கப்பட்டன.
அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார்.
13 மனுக்களுக்கு நடவடிக்கை
இதனைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் கலெக்டர் கார்மேகம் குறைகளை கேட்டு அவர்களிடம் மனுக்களை பெற்றார். மாற்றுத்திறனாளிகள் வழங்கிய 13 மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தினார்.
பணி நியமன ஆணை
முன்னதாக, அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் கார்மேகம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும், ஊரக வளர்ச்சித் துறையில் 6 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்கினார்.
இதைதொடர்ந்து, கூட்டுறவுத் துறையின் மூலம் மாற்றுத்திறனாளி சுயதொழில் தொடங்க ரூ.50 ஆயிரம் வட்டியில்லா கடன் உதவிக்கான காசோலையை மாவட்ட கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார், மண்டல தமிழ்வளர்ச்சித்துறை துணை இயக்குனர் பவானி, தனித்துணை கலெக்டர் சத்திய பாலகங்காதரன், மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.