கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 1,024 பேர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
சென்னை,
உயர்கல்வித் துறை சார்பில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் விரிவுரையாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 1,024 பேர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 11 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில், விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு உரிய நபர்களை தேர்வு செய்திட ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த 2019 நவம்பர் 27-ந் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டு, 2021 டிசம்பர் 8-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை கணினி வழித் தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
அதன்படி, விரிவுரையாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 1,024 நபர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தா.கார்த்திகேயன், தொழில்நுட்ப கல்வி ஆணையர் க.லட்சுமிபிரியா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.