மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை; அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்


மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை; அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
x

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நடந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி;

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நடந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. முகாமில் சுமார் 30 தனியார் நிறுவனங்கள், 800 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். முகாமிற்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். கலெக்டர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் 102 மாற்றுத்திறானாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பிலான உதவி உபகரணங்கள், உதவித்தொகைக்கான ஆணைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். மேலும் இந்த முகாமில் சுமார் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு யு.டி.ஐ. அடையாள வழங்கப்பட்டது.

உதவித்தொகை உயர்த்தப்படும்

பின்னர் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் மாற்றுத்திறனாளிகள் துறையை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு என்னென்ன திட்டங்கள் வேண்டும் என்று ஆய்வு செய்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மத்திய அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கக்கூடிய யு.டி.ஐ. அடையாள அட்டை என்பது ஆதார் அட்டை போன்றது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த அடையாள அட்டை வழங்குவதற்கு சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.இந்த முகாம் நிச்சயமாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகரமாக இருக்கும். மனவளர்ச்சி குன்றியவர்களின் பெற்றோருக்கும் உதவிகள் செய்யப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1,500-ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். தகுதியுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படும். நீங்கள் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் மனு மட்டும் அளித்தால் போதும். உங்களுக்கு உடனடியாக உதவுவதற்கு அரசு தயாராக இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மகளிர் திட்டம் திட்ட அலுவலர் வீரபுத்திரன், மாவட்ட தொழில் மையம் மேலாளர் சொர்ணலதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார், வ.உ.சி. கல்லூரி முதல்வர் வீரபாகு, மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கோடை கால பயிற்சி முகாம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தூத்துக்குடி மாவட்ட பிரிவு மற்றும் மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் கழகம் சார்பில் தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் கடந்த 10 நாட்களாக நடைபெற்றது. இதில் பீச் கபாடி, பீச் வாலிபால், வில்வித்தை, குத்துச்சண்டை, கூடைப்பந்து, கைப்பந்து, ஆக்கி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முகாமில் 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சி முகாமின் நிறைவு விழா நேற்று தூத்துக்குடி தருவைகுளம் விளையாட்டு மைதானத்தில் நடந்தது. கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பயிற்சி முகாமில் கலந்துகொண்ட மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில், "ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மினி ஸ்டேடியம் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதுபோல் தூத்துக்குடி தருவைகுளம் விளையாட்டு மைதானத்தில் வீரர்களுக்கு நவீன செயற்கை ஓடுதளம் (சிந்தடிக் டிராக்) அமைத்துக் கொடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பேட்ரிக், மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் கழக தலைவர் சேவியர் ஜோதி சற்குணம் மற்றும் விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திறன் வளர்ப்பு பயிற்சி

கோவில்பட்டி நகரசபை கூட்டரங்கில் நேற்று பாலியல் வன்கொடுமையில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். நகரசபை தலைவர் கருணாநிதி, ஆணையாளர் ராஜாராம், துணை தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல ஆர்வலர் வக்கீல் சொர்ணலதா, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி உதவி பேராசிரியர் ஜான் மோசஸ் கிரிதரன், மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, குழந்தை நலக்குழு உறுப்பினர் அழகு சுந்தர்ராஜ், சைல்டு லைன் இயக்குனர் மன்னர்மன்னன், உறுப்பினர் ராம லட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில் நகரசபை கவுன்சிலர்கள், சுய உதவிக்குழுவினர், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story