போதைப்பொருளை ஒழிக்கும் போலீஸ் அதிகாரிகளை பாராட்டுவேன்: முதல்-அமைச்சர் பேச்சு


போதைப்பொருளை ஒழிக்கும் போலீஸ் அதிகாரிகளை பாராட்டுவேன்: முதல்-அமைச்சர் பேச்சு
x

இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப்பொருளை பெருமளவு ஒழிக்கும் போலீஸ் அதிகாரிகளை எப்போதும் பெரிதும் பாராட்டுவேன் என கள ஆய்வின் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

''கள ஆய்வில் முதல்-அமைச்சர்'' என்ற புதிய திட்டத்தின் கீழ், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இதனையடுத்து மாலையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களின் போலீஸ் உயர் அலுவலர்களுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பாக மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

எளிதில் அணுகும் விதம்

போலீசாரின் பணிகள் மக்கள் எளிதில் அணுகும் விதமாக இருக்க வேண்டும் என்றும், போலீஸ் நிலையத்திற்கு மக்கள் எவ்வித அச்சமும் இன்றி புகார் அளிக்க வரக்கூடிய சூழ்நிலையை, ஏற்படுத்த வேண்டும்.

மக்களுக்கும், போலீசுக்குமான உறவு என்பது எளிமையானதாகவும், மனிதநேய அடிப்படையிலும் அமைய வேண்டும். போலீசாரின் செயல்பாடுகள் மக்களுக்கு தெரியும்படி வெளிப்படையாக இருக்கவேண்டும்.

சாதிக் கலவரம் வராமல்...

சட்டவிரோத செயல்களை, குற்றச்சம்பவங்களை தடுப்பது தான் திறமையான போலீசாருக்கு இலக்கணம் ஆகும். கோவில் திருவிழாக்கள், எருது விடும் நிகழ்வுகள் போன்றவற்றில் கவனக்குறைவாக இருந்து விட்டால் அது மாவட்ட நிர்வாகத்திற்கும் அரசுக்கும் உள்ள நற்பெயரை பாதித்துவிடும். போலீசார் கவனம் செலுத்தவேண்டிய மற்றொரு முக்கிய இனம் போதைப்பொருள் ஒழிப்பு ஆகும்.

சில மாவட்டங்களில் சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தாலும், சரகம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட வேண்டும். மாநில எல்லைப்பகுதியாக இருப்பதால் உங்கள் கவனம் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும்.

இந்த மாவட்டங்களில் எந்த சூழ்நிலையிலும் சாதிக்கலவரம் ஏற்படாமல் கட்டாயம் பார்த்துக்கொள்ள வேண்டும். இதில், மாவட்ட கலெக்டர்களின் பங்கு மிக முக்கியமானது. வாராந்திர சட்டம் ஒழுங்கு கூட்டத்தில் இதனை வருவாய் துறையினர் மற்றும் போலீசாருடன் ஒருங்கிணைந்து ஆய்வு நடத்தி, தேவையான இடங்களில் அமைதி பேச்சுவார்த்தைகளை நடத்தி பிரச்சினைகளை ஆரம்ப கட்டத்திலேயே தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரிதும் பாராட்டுவேன்

இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப்பொருளை பெருமளவு ஒழிக்கும் போலீஸ் சூப்பிரண்டை எப்போதும் பெரிதும் பாராட்டுவேன்.

பெரும்பாலும், குற்ற நிகழ்வுகளில் பாதிக்கப்படுபவர்கள், நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களாக இருப்பதால், அவர்களிடம் நீங்கள் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது. அவர்களின் புகார்களில் உள்ள உண்மைத்தன்மையை ஆய்ந்தறிந்து அவர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக இருக்க வேண்டும். அப்போது தான், ''காவல் துறை உங்கள் நண்பன்'' என்ற சொற்றொடர் உண்மையாகும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

ஆய்வுக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு, கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் மற்றும் ஒழுங்கு) சங்கர் உள்பட அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story