உலக கோப்பை ரோல்பால் போட்டி; இந்திய அணிக்கு தேர்வான மாணவ-மாணவிக்கு பாராட்டு
உலக கோப்பை ரோல்பால் போட்டியில் விளையாட இந்திய அணிக்கு தேர்வான மாணவ-மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மராட்டிய மாநிலம் புனேயில் 6-வது உலக கோப்பை ரோல்பால் போட்டிகள் வருகிற 21-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை நடக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் இந்த போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர். அதேபோல் இந்திய அணி சார்பில் பெண்கள் அணியில் 12 பேரும், ஆண்கள் அணியில் 12 பேரும் பங்கேற்கின்றனர். இதில், தமிழ்நாட்டை சேர்ந்த சுஷ்மிதா (வயது 21) என்ற மாணவி பெண்கள் பிரிவிலும், பிரதீப் (23) என்ற மாணவர் ஆண்கள் பிரிவிலும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் 2 பேரும் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை சேர்ந்தவர்கள் ஆவர்.
இதையடுத்து தேசிய போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிக்கு பாராட்டு விழா மற்றும் வழியனுப்பு விழா, சின்னாளப்பட்டியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு சர்வதேச நடுவரும், பயிற்சியாளருமான பிரேம்நாத் தலைமை தாங்கி, சுஷ்மிதா மற்றும் பிரதீப்புக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினார். இதில், ரோல்பால் அசோசியேசன், தென்னிந்திய செயலாளர் சுப்பிரமணியன், மாநில செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் பொதுமக்கள், ரோல்பால் ஸ்கேட்டிங் வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டு, மாணவ-மாணவியை பாராட்டினர்.