அண்ணாமலையால் தன்னிச்சையாக செயல்பட முடியாது நாகர்கோவிலில் சீமான் பேட்டி


அண்ணாமலையால் தன்னிச்சையாக செயல்பட முடியாது நாகர்கோவிலில் சீமான் பேட்டி
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 8:19 PM IST)
t-max-icont-min-icon

அண்ணாமலையால் தன்னிச்சையாக செயல்பட முடியாது என நாகர்கோவிலில் சீமான் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

அண்ணாமலையால் தன்னிச்சையாக செயல்பட முடியாது என நாகர்கோவிலில் சீமான் தெரிவித்துள்ளார்.

கடல் யாருக்கும் சொந்தமில்லை

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான் நேற்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும். மாற்றம் வேண்டும் என முடிவெடுத்தால், அதை மக்களே செய்வார்கள். நாங்கள் ஓட்டுக்கு காசு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அதிகாரிகள் துணையோடு சிலர் காசு கொடுத்து வருகிறார்கள். காங்கிரசுடன் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என கமல் நினைக்கிறார். அது அவருடைய கொள்கை முடிவு. ஆனால் நான் தனியாகத்தான் நிற்பேன்.

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு ஏற்கனவே சிலைகள் வைத்திருக்கிறார்கள். மதுரையில் கருணாநிதி பெயரில் நூலகம் உள்ளது. இந்த நிலையில் கடலுக்குள் 137 அடியில் பேனா சிலை அமைப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. கடல் யாருக்கும் சொந்தமில்லை. கடலை நிரப்பி பேனா வைப்பதாக கூறுவது கண்டிக்கத்தக்கது.

போராடுவோம்

காட்டுப்பள்ளியில் அதானி துறைமுகத்துக்கு 6,111 ஏக்கர் நிலத்தை விரிவாக்கத்துக்கு எடுத்துக் கொள்ளலாம் என கையெழுத்திட்டது இந்த பேனாதான். அரை ஏக்கர் கடலில் பேனா சிலை வைத்தால், அதை காரணம் காட்டி காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்துக்கு எளிதில் அனுமதி கிடைத்து விடும் என்பதால் அதைச் செய்கிறார்கள். நடிகர் சிவாஜி மற்றும் கண்ணகி சிலைகள் மாற்றப்பட்டன. அதுபோல நாங்களும் பேனா சிலையை தூக்குவோம்.

இப்போது அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ள நிலை தான் விரைவில் தி.மு.க.வுக்கு ஏற்படும். உலகின் 6-வது பெரிய கடற்கரையை எப்படி சுடுகாடாக மாற்றினீர்கள். இப்படியே சென்றால் கடற்கரை இருக்காது. அங்கு கல்லறை தான் இருக்கும். ஏற்கனவே மக்களின் பிரச்சினைகளுக்காக பல போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம். இதில் பேனாவுக்கு எதிராகவும் போராடுவோம்.

கனிம வளங்கள்

விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாக்க நடவடிக்கை இல்லை. ஆனால் மதுவை பாதுகாக்க குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்கு, அதற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்படுகிறது. தஞ்சையில் சேதமான பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் என்பது குறைவானது. குடிநீரில் மனித கழிவு கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மலை இல்லை என்றால் மழை இல்லை.

திராவிட மாடல் என்பது வேடிக்கையானது. இலங்கையில் 12 மீனவர்கள் சங்கிலியால் கட்டி இழுத்து செல்லப்பட்டதற்கு தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சியும் கண்டனம் தெரிவிக்கவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்தது நாம் தமிழர் கட்சி தான். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு வட மாநிலத்தவர்கள் ஏராளமானோர் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டார்கள். இதனால் வருங்காலத்தில் இலங்கையில் நடந்தது போல தமிழகத்திலும் நடக்கும்.

அண்ணாமலையால் தன்னிச்சையாக...

ஈரோடு கிழக்கு தேர்தலில் நாங்கள் நேரடியாக மோதுகிறோம். ஈரோட்டில் சூரியன் உதிக்காது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் 20 ஆண்கள், 20 பெண்களை களத்தில் நிறுத்துவோம். தமிழகத்தில் அண்ணாமலையால் தன்னிச்சையாக முடிவு எடுக்கவோ, பேசவோ மற்றும் செயல்படவோ முடியாது. மத்தியில் என்ன சொல்கிறார்களோ, அதையே அண்ணாமலையால் செயல்படுத்த முடியும்.

அண்ணாமலைக்கு சீனாவால் பாதிப்பு இருப்பதாக அவர் கூறுவது வேடிக்கையானது. தேங்காப்பட்டணம் துறைமுகத்தை சீரமைக்க நடவடிக்கை இல்லை. இதனால் ஏராளமான மீனவர்கள் இறக்கிறார்கள். ஆனால் அதனை கண்டு கொள்ளாமல் மக்கள் பணத்தை வீண் விரயம் செய்யும் வகையில் கடலின் நடுவே பேனா வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. பா.ஜனதா வெளியிட்டுள்ள பட்ஜெட் தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட பட்ஜெட்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story