நீண்டதூர ரெயில்களில் போதுமான வசதி செய்து தரப்படுகிறதா?
எம்.ஜி.ஆர். சென்டிரல், எழும்பூரில் இருந்து புறப்படும் நீண்டதூர ரெயில்களில் போதுமான வசதி செய்து தரப்படுகிறதா? என்பது குறித்து பயணிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள் 150 ஆண்டுகள் பழமையானவை. அதில் சென்டிரல் தற்போது புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்டிரல் ரெயில் நிலையம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த ரெயில் நிலையத்தில் இருந்து, டெல்லி, ஹவுரா, மும்பை, பெங்களூரு, திருவனந்தபுரம் மார்க்கங்களில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சராசரியாக ஒரு நாளைக்கு 158 ரெயில்கள் இயக்கப்படுவதன் மூலம் ஒரு லட்சத்து 78 ஆயிரம் பேர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இங்குள்ள 17 பிளாட்பாரங்களில், 5 பிளாட்பாரங்களில் புறநகர் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
எழும்பூர்
இதேபோன்று எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து தினசரி 96 ரெயில்கள் இயக்கப்படுவதன் மூலம் 1.17 லட்சம் பயணிகள் தினசரி பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இங்குள்ள 11 பிளாட்பாரங்களில் 10 மற்றும் 11-வது பிளாட்பாரங்களில் புறநகர் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இப்படி சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் இருந்து தினசரி 254 ரெயில்கள் இயக்கப்படுவதன் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். லட்சக்கணக்கில் வந்து செல்லும் பயணிகளுக்கு ரெயில்களிலும், பிளாட்பாரங்களிலும் போதிய வசதிகளை ரெயில்வே நிர்வாகம் செய்து தந்து உள்ளதா? அவை போதுமானதாக இருக்கிறதா? என்பது குறித்து பயணிகள் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர்.
ரெயில்கள் நின்று செல்ல வேண்டும்
கடலூர் ஆனந்த்: கடலூர் மாவட்ட தலைநகரில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையம் வழியாக சென்னை எழும்பூர் செல்லும் பெரும்பாலான ரெயில்கள் நிற்பதில்லை. இதனால் கடலூர் மாநகர மக்கள், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு செல்ல வேண்டுமானால் ரெயிலை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. 10-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தை கடந்து செல்லும் நிலையில், 3 ரெயில்கள் மட்டுமே நிற்கின்றன. அதிலும் முன்பதிவில்லா பெட்டிகள் 3, 4 பெட்டிகள் மட்டுமே இருப்பதால், ரெயிலில் இடம் கிடைக்காமல் புலம்பியபடி மக்கள் திரும்பி செல்லும் சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது. வசதி படைத்தவர்கள் பஸ்களில் சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு எளிதில் சென்று விடுவார்கள். ஆனால் ஏழை, எளிய மக்கள் ரெயிலையே நம்பி பயணிக்கின்றனர். அதனால் கடலூர் வழியாக இயக்கப்படும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை. அதனையும் நிறைவேற்றி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுத்தமில்லாத கழிவறைகள்
விருத்தாசலம் நாகலட்சுமி: விருத்தாசலம் வழியாக சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கும், மும்பை, டெல்லி, பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களுக்கும் தினசரி ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அவ்வாறு நீண்ட தூரம் செல்லும்போது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ரெயில்வே நிர்வாகம் கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும். கழிவறைகள் சுத்தம் செய்யப்படாததால், கழிவறை கதவு திறந்தால் பயணிகள் உட்கார்ந்து இருக்க முடியாத அளவிற்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. நீண்ட தூரம் பயணம் செய்யும் முதியவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் கழிவறை வசதிக்காக தான் ரெயில் பயணத்தை விரும்புகின்றனர். ஆனால் அவர்களுக்கு சுகாதாரமான கழிவறை வசதிகளை செய்து தருவதில்லை. குளிர்சாதன வசதியுடைய பெட்டிகள் மட்டுமே முழுமையாக பராமரிக்கப்படுகிறது. குளிர்சாதன வசதி அல்லாத பெட்டிகள் பராமரிப்பின்றியே இருக்கின்றன. பாமர மக்களால் தான், ரெயில்வே நிர்வாகமே இயங்குகிறது. அதனால் பாமர மக்களுக்கு தேவையான சேவைகளை அளிப்பதில் பாகுபாடு காட்டக் கூடாது. தனிநபர் கழிவறையை ஊக்குவிக்கும் மத்திய அரசு, தனது கட்டுப்பாட்டில் உள்ள ரெயில்வே துறையை முடுக்கி விட்டு அனைத்து ரெயில்களிலும் கழிவறைகளை முறையாக பராமரித்து சுகாதார வசதியை உறுதிப்படுத்த வேண்டும்.
ரெயில் பயணத்தை வெறுக்கும்...
சிதம்பரம் பாஸ்கர்: காசி உள்ளிட்ட புண்ணிய தலங்களுக்கு ரெயிலில் செல்வதற்கே அனைவரும் விரும்புகின்றனர். சென்னை சென்டிரலில் இருந்து டெல்லி உள்ளிட்ட தொலைதூர ரெயில்களில் பயணிகளுக்கு போதுமான வசதிகள் செய்து தரப்படுகிறது என்றாலும், இன்னும் வசதிகளை மேம்படுத்த வேண்டும். ரெயில்களில் அவ்வப்போது சுத்தம் செய்து பயணிகளிடம் சுகாதாரம் குறித்து கையெழுத்து பெறுகின்றனர். தொலைதூர ரெயில்களில் குளிர்சாதன வசதியுடைய பெட்டிகள் தவிர, சாதாரண முன் பதிவு பெட்டிகளில், டிக்கெட் எடுக்காமல் பலர் ஏறி இடையூறு செய்கின்றனர். இதனால் முன்பதிவு செய்து ரெயிலில் பயணிப்பவர்கள் தூங்க கூட முடியாமல் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக ரெயில் பயணத்தையே வெறுக்கும் நிலை ஏற்படுகிறது. அதனால் டிக்கெட் பரிசோதகர்கள் அடிக்கடி பெட்டிகளில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தொலைதூர ரெயில்களில் பயணிகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். தொலைதூர ரெயில்களில் கழிவறைகள் அவ்வப்போது சுத்தம் செய்யப்பட வேண்டும். அதே நேரத்தில் இரு தினங்கள் ரெயிலில் பயணிக்கும் போது கழிவறைகளில் ஷவர் போன்று குளிப்பதற்கான வசதிகளை மேம்படுத்தலாம்.
கூடுதல் பெட்டிகள் இணைப்பு
அரங்கூர் கோபி கிருஷ்ணன்: சென்னை எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களும் விருத்தாசலம் வழியாக தான் செல்கிறது. ஆனால் அந்த ரெயில்கள் சென்னையில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தண்ணீர் அனைத்தும் தீர்ந்து விடுகிறது. இதனால் கழிவறையில் தண்ணீர் இல்லாததால், அதனை பயன்படுத்த முடியாமல் பயணிகள் சிரமப்படுகின்றனர். மேலும் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்பட்டு செல்லும் எந்த ரெயில்களிலும் உணவு தயாரிக்கும் பேன்ட்ரி கார் வசதிகள் இல்லை. இதனால் வழியில் விற்கப்படும் தரமில்லாத உணவுகளை வாங்கிச் சாப்பிட்டு பயணத்தின் போது உடம்பை கெடுத்து கொள்ளும் அவல நிலை தான் உள்ளது. மேலும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சென்னையில் இருந்து கடலூர் வழியாக தென்மாவட்டங்களுக்கும், சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் கூடுதல் ரெயில்கள் இயக்கப்பட வேண்டும். இதுதவிர அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். அவசரமாக பயணம் செய்வதாக இருந்தால் டிக்கெட் பெறுவது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. அதுவும் பிரீமியம் தட்கல் என்ற பெயரில் 1-க்கு 3 மடங்கு அதிகமாக தொகையை பெற்று பெயரளவில் பெட்டியின் ஓரத்தில் ஒரு சீட் வழங்குவதை ஏற்க முடியவில்லை. பிரீமியம் டிக்கெட் என்றால் கூடுதல் கட்டணம் செலுத்துபவர்களுக்கு முறையான படுக்கையை வழங்க வேண்டும். அதேபோல் கழிவறை சுத்தம், தரமான உணவு வினியோகம் செய்யவும் ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'.