வெளிமாநில தொழிலாளர்கள் விவரங்கள் முறையாக பதிவு செய்யப்படுகிறதா? அதிகாரிகள் கண்காணிக்க அமைச்சர் உத்தரவு
வெளிமாநில தொழிலாளர்கள் விவரங்கள் முறையாக பதிவு செய்யப்படுகிறதா? என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும் என்று அமைச்சர் சி.வி.கணேசன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறை அலுவலர்களுக்கு பணி திறனாய்வு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசும்போது, "தமிழ்நாடு முதல்-அமைச்சரின் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்ற நாள் முதல் தொழிலாளர்களுக்கு புதிய நலத்திட்டங்களை அறிவித்து தொழிலாளர்களின் நலன் மற்றும் வாழ்க்கைத் திறனை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது" என்றார்.
பின்னர் அவர் தொழிலாளர் அலுவலர்களுக்கு வழங்கிய அறிவுரைகள், ஆலோசனைகள் வருமாறு:-
* தொழிலாளர் துறையின் கீழ் இயங்கும் 18 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் வாரிய உறுப்பினர்களை விரைவாக சென்று சேர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
* தொழிலாளர் துறை அலுவலர்கள் அமைப்புசாரா வாரியங்களில் பெறப்படும் கேட்புமனுக்களின் மீது உடனுக்குடன் தீர்வு காண வேண்டும், நிலுவை ஏதுமின்றி செயல்பட வேண்டும். பதிவு புதுப்பித்தலிலும் நிலுவை இன்றி விரைந்து செயலாற்ற வேண்டும்.
* தொழிலாளர் துறையின் செயல்பாடுகளான சமரசப் பணிகள், நீதிசார் பணிகள், சட்ட அமலாக்க பணிகள் போன்ற பணிகள் தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒருங்கிணைப்பு குழு
* தொழில் தகராறுகள் சட்டம், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம்-1947, குறைந்தபட்ச ஊதிய சட்டம்-1948, பணிக்கொடை பட்டுவாடா சட்டம்-1972, சட்டமுறை எடையளவு சட்டம்-2009 மற்றும் பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்கள் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்.
* பல்வேறு தொழிலாளர் நல சட்ட அமலாக்க பணிகளை துறை அலுவலர்கள் புகார்களுக்கு இடமளிக்காமல் மேற்கொள்ள வேண்டும்.
* அமலாக்க அலுவலர்கள் ஆய்வின் சமயம் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் உரிய காலத்தில் வழங்கப்படுகிறதா? என்பதனை உறுதிசெய்ய வேண்டும்.
* ஆய்வின் போது வெளிமாநில தொழிலாளர்கள், தொழிலாளர் துறையின் வலைதளத்தில் தங்களின் விவரங்களை பதிவேற்றம் செய்துள்ளார்களா? என்பதனை உறுதி செய்ய வேண்டும்.
* 31.3.2023 அன்று மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர் தொழிலாளர்களுக்கென மாநில அளவிலான ஆலோசனை குழு மற்றும் மண்டல அளவிலான ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, மாநில மற்றும் மண்டல அளவிலான குழு கூட்டங்களை நிர்ணயிக்கப்பட்ட கால இடைவெளிக்குள் நடத்த வேண்டும்.
நல்லுறவு
* சமரச அலுவலர்கள் நாட்டில் தொழில் வளர்ச்சி மேம்படுத்தப்படுவதோடு, தொழிலாளர் நலன் பாதுகாக்கும் வகையிலும் தொழிலாளர் மற்றும் வேலையளிப்போர் இடையே நல்லுறவினை மேம்படுத்தும் வகையிலும் சிறப்பாக செயல்பட வேண்டும்.
மேற்கண்டவாறு அமைச்சர் சி.வி.கணேசன் அறிவுரைகள் வழங்கினார்.
இந்த கூட்டத்தில் தொழிலாளர் கமிஷனர் அதுல் ஆனந்த் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.